search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தி.மு.க. நிச்சயம் கொண்டு வரும்- கே.எஸ்.அழகிரி நம்பிக்கை
    X

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தி.மு.க. நிச்சயம் கொண்டு வரும்- கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

    • அ.தி.மு.க. சொல்வது போல் மதுவை அரசே ஆதரிக்கிறது என்பதெல்லாம் தவறானது.
    • காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

    சென்னை:

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் அதிகரித்து விட்டதாகவும், அதற்கு அரசு துணை போவதாகவும் குற்றம் சாட்டி அ.தி.மு.க. இன்று பேரணி நடத்தி கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து விட்டது. அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் தவறு செய்பவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 7 கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்யும். அதை அரசும் வேடிக்கை பார்க்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துதான் வருகிறது.

    ஆனால் அ.தி.மு.க. சொல்வது போல் மதுவை அரசே ஆதரிக்கிறது என்பதெல்லாம் தவறானது. இந்த விசயத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

    தமிழக மக்கள் இவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இதற்கென்று மிகப்பெரிய பாரம்பரியமே உள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் கள் மற்றும் சாராயம் விற்பதற்கு அரசே கடைகளை திறந்தது. அப்போது தமிழகத்திலும், குஜராத்திலும் மட்டும் மதுவிலக்கு அமலில் இருந்தது. அதுபற்றி பலரும் காமராஜரிடம் கேட்டு இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதே உங்கள் மாநிலத்தில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

    அதற்கு காமராஜர் சொன்ன பதில், "இன்னொருத்தர் தப்பு செய்தால் அதே தப்பை நானும் செய்ய வேண்டுமா? நான் ஒரு காலத்திலும் சாராய கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கூறி இருக்கிறார். அதனால்தான் அவரை கருப்பு காந்தி என்று அழைத்தார்கள்.

    இன்றும் தமிழகத்தில் மதுவிலக்கு வர வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் காங்கிரஸ் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே எண்ணத்தில் இருக்கிறார். இதை அவரோடு உரையாடிய போது நான் நேரிலே அறிந்தவன். இப்போதும் படிப்படியாக மதுவிலக்கு அமல் செய்யப்படும் என்றுதான் கூறி வருகிறார்.

    எந்த காரியத்தையும் எடுத்தவுடன் ஒரேயடியாக செய்து விட முடியாது. அவ்வாறு செய்யும் போது அதற்கு எதிர் வினைகள் உருவாகும். தி.மு.க. அரசின் கொள்கையும், மது விலக்கு என்பதாக இருக்கிறது. எனவே தமிழகத்திலும் மது விலக்கை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மது விலக்கை அமல்படுத்த கோரி காங்கிரசும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×