search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனிமொழி குழுவிடம் குவிந்த 25 ஆயிரம் மனுக்கள்
    X

    கனிமொழி குழுவிடம் குவிந்த 25 ஆயிரம் மனுக்கள்

    • பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
    • தேர்தல் அறிக்கையில் அவசியம் இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலர் ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அரசு கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், நா. எழிலன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துகளைப் பெற இந்தக் குழுவினர் மண்டல வாரியாக பயணம் மேற்கொண்டனர். கடந்த 5-ந் தேதி தூத்துக்குடியில் பயணத்தைத் தொடங்கிய குழுவினர், வெவ்வேறு மண்டலங்களில் பயணத்தை முடித்த நிலையில், இறுதியாக சென்னையில் நேற்று கருத்துகளைக் கோரினர்.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.

    முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி. பேசுகையில்,

    மக்களுடைய கருத்துகளை எதிரொலிக்கும் வகையில் அவர்களுக்கான அறிக்கையாக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, விவசாயிகள், நெசவாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தோம். அவர்கள் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று கருத்துக்களை முன்வைத்தார்களோ, அதையெல்லாம் ஒருங்கிணைத்து தி.மு.க. தலைவரிடம் ஒப்புதலைப் பெறுவோம். அதன்பின்னர் தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம் என்றார்.

    சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகள், கட்சியைச் சேர்ந்த துணை அமைப்புகளிடம் இருந்தும் கோரிக்கைகள், கருத்துகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பெறப்பட்டன.

    இன்று தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் கனிமொழி எம்.பி. குழுவினரிடம் மனுக்களை கொடுத்தனர். தேர்தல் அறிக்கையில் அவசியம் இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இதுவரை சுமார் 25 ஆயிரம் மனுக்கள் குவிந்து இருக்கிறது. அதில் சுமார் 18 ஆயிரம் கருத்துக்கள் போன் மூலம் வந்தவையாகும். 2,500 கருத்துக்கள் இ-மெயில் மூலம் வந்திருக்கின்றன.

    சமூக வலைதளங்கள் மூலம் 4 ஆயிரம் கருத்துக்கள் கனிமொழி எம்.பி.யிடம் வந்து சேர்ந்து இருக்கிறது. நேரடியாக மக்களிடம் இருந்தும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஆய்வை முடிக்கும் போது சுமார் 40 ஆயிரம் பரிந்துரைகள் பெறப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த 40 ஆயிரம் பரிந்துரைகளில் இருந்து முக்கிய அம்சங்களை தொகுத்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக தயாரிக்க உள்ளனர்.

    Next Story
    ×