search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழக தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்

    • 27-ந்தேதி ஒசாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பிரபல கோட்டையையும் சுற்றிப் பார்த்தார்.
    • 28-ந்தேதி புல்லட் ரெயிலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    சென்னை:

    தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது.

    இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.

    கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருந்த அவர் 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டுக்கான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து பேசினார்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வாருங்கள். முதலீடு செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடு. நீங்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார்.

    வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக சிங்கப்பூரில் ஹ.பி. இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் மின்னணு பாகங்கள் தயாரிப்புக்கான முதலீட்டில் கையெழுத்திட்டது.

    இதன் பிறகு சிங்கப்பூர் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சட்ட அமைச்சர் சண்முகம் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இரு தரப்பு வர்த்தக உறவு குறித்து பேசினார்.

    சிங்கப்பூர் வாழ் தமிழர்களையும் சந்தித்தார். அங்கு நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

    அதன் பிறகு சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு மே 25-ந்தேதி ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அங்குள்ள ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான 'ஜெட்ரோ' வுடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

    ஜப்பானின் டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

    27-ந்தேதி ஒசாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பிரபல கோட்டையையும் சுற்றிப் பார்த்தார்.

    28-ந்தேதி புல்லட் ரெயிலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

    29-ந் தேதி ரூ.818.90 கோடி முதலீடு தொடர்பாக 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் ஓமரான் ஹெல்த்கேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இரு நாடுகளிலும் மொத்தம் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1258.90 கோடி அளவுக்கு தமிழ்நாட்டுக்கு முதலீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலையில் ஜப்பானில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

    சிங்கப்பூர் வழியாக வரும் அவர் இன்றிரவு 10 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    Next Story
    ×