search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கணவரை சுட்டுக்கொன்று தடயங்களை அழித்த 8 பேர் மீது நடவடிக்கை எடுங்கள்- பெண் கண்ணீர் மனு
    X

    இறந்து கிடந்த மூர்த்தி.

    கணவரை சுட்டுக்கொன்று தடயங்களை அழித்த 8 பேர் மீது நடவடிக்கை எடுங்கள்- பெண் கண்ணீர் மனு

    • கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி மலை கிரா மத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடு களுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 8 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்றுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் மூர்த்தியின் மனைவி மணிமேகலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் வீட்டில் 10 ஆடுகள் வளர்த்து வருகிறோம். என் கணவர் தினமும் காட்டிற்கு சென்று ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டி எடுத்து வருவார். கடந்த 18-4-2023 அன்று வழக்கம் போல என்னுடைய கணவர் மற்றும் வேலு என்பவர் மேய்ச்சலுக்கு சென்றனர். ஆனால் அதன் பின்னர் என் கணவர் மூர்த்தி வீடு திரும்பவில்லை.

    இதை அடுத்து 19-4-2023 அன்று காலை முதல், என்னுடைய உறவினர்களுடன் சேர்ந்த என் கணவரை தேடினேன். அப்போது, கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று, தலையிலும் விலாவிலும் குண்டு அடிபட்ட என் கணவரின் உடலை பார்த்தோம்.

    பின்னர் இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்தில் கூறினேன். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி உண்மைக்கு புறம்பான எதை எதையோ எழுதிக் கொண்டு என்னிடமும், வேலு மற்றும் வேறு சில சாட்சியிடமும் கையொப்பம் வாங்கிக் கொண்டனர்.

    இது மட்டுமன்றி வேறு சில வெற்று காகிதங்களில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு பின்னர் தேவைப்படும் என்று சொன்னார். அந்த நேரத்தில், என் கணவரை சுட்டு கொன்ற கள்ளத் துப்பாக்கி வைத்திருக்கும் கும்பல் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர்.

    உடனே என்னை போலீஸ் அதிகாரி சரிமா நீ வீட்டுக்கு போ, நான் பார்த்துக் கொள்கிறேன், உன் கணவர் மூர்த்தியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு நான் உரிய தண்டனை வாங்கி தருகிறேன் என்று கூறி எங்களை போலீஸ் நிலையத்திலிருந்து விரைவாக அனுப்பிவிட்டார்.

    தற்போது என் கணவர் மரத்தில் ஏறி இலைகளை பறித்தபோது வலிப்பு வந்ததால், தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    அவர் உள்பட 8 பேரும் வனப்பகுதியில் வேட்டையாடும் போது, அதன் அருகில் புறம்போக்கு நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எனது கணவர், இதனை வன அதிகாரிகள், போலீசாரிடம் சொல்லி விடுவார் என்பதால் அவரை தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டனர்.

    பின்னர் அதிகாரிகளின் துணையோடு, எங்கள் பழங்குடியினர் வழக்கத்திற்கு மாறாக குண்டு அடிபட்ட அவர் சடலத்தை எரித்து தடயங்களை அழித்துவிட்டனர். மேலும் போலீசார் உள்ளிட்ட அதி காரிகள் ரூ. 8 லட்சம் லஞசம் வாங்கி கொண்டு சாட்சிகளை மறைத்துவிட்டனர்.

    எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சி.பி.சி.ஐடி போலீஸ் மூலமாக மறு விசாரணை செய்து 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிர் ஆபத்து இருப்பதால், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×