search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியது: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
    X

    வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியது: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    Next Story
    ×