search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
    X

    பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

    • சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
    • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.

    இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும் கட்சியில் காட்சிகள் மாறியது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. அதற்கு பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இதை எதிர்த்து தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர்.

    அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் சசிகலா தான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வந்தார்.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

    இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கட்சி முற்றிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தது.

    சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினார்கள்.

    அதில் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதும், கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    Next Story
    ×