search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாட்ஸ் அப் குழு மூலம் லாட்டரி சீட்டு விற்ற கணவன், மனைவி கைது- 9 ஏஜெண்டுகளும் சிக்கினர்
    X

    வாட்ஸ் அப் குழு மூலம் லாட்டரி சீட்டு விற்ற கணவன், மனைவி கைது- 9 ஏஜெண்டுகளும் சிக்கினர்

    • பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
    • வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி கொண்டுரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (43). இவரது மனைவி எழிலரசி (33). இவர்களிடம் பவானியை சேர்நத ஒருவர் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.

    பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.

    பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    பட்டதாரிகளான கணவன், மனைவி 2 பேரும் லேப்டாப் மற்றும் செல்போனில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி பவானி, அம்மாபேட்டை, சித்தோடு, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏஜெண்டுகள் நியமித்து அவர்கள் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை ஆன்லைன் மூலம் அனுப்பி பரிசு விழும் என கூறி பொதுமக்களை நம்ப வைத்து லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து வாட்ஸ்அப் குழுவில் இருந்த பவானியை சேர்ந்த அப்புசாமி, காடையாம்பட்டியை சேர்ந்த தினேஷ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகராஜன், ஆதிநாராயணன், அம்மாபேட்டை குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கண்ணுசாமி, நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த ரசூல், சித்தோடு நால்ரோடு பகுதியை சேர்ந்த வேலுமணிகண்டன், பெருந்துறையை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 9 ஏஜெண்டுகளையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 11 பேரிடம் இருந்து 2 லேப்டாப், 2 டேப், 11 செல்போன்கள், 2 வங்கி பாஸ் புத்தகம், ஒரு ஏ.டி.எம். கார்டு, ரூ.13 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கைதான 11 பேரும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஆண்கள் 10 பேர் பவானி கிளை சிறையிலும், எழிலரசி கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×