search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபோதை தகராறில் பாலிடெக்னிக் மாணவரை அடித்துக்கொன்ற நண்பர்கள்- 3 பேர் கைது
    X

    மதுபோதை தகராறில் பாலிடெக்னிக் மாணவரை அடித்துக்கொன்ற நண்பர்கள்- 3 பேர் கைது

    • சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவராம கணேஷ்(வயது16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சிவராம கணேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்பு இரவில் வீடு திரும்பிய சிவராம கணேசின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அதுகுறித்து பெற்றோர் கேட்டபோது மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் நேற்று மாணவர் சிவராம கணேசுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பேச்சு மூச்சின்றி கிடந்த அவரை, அவரது பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிவராம கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தனது மகன் இறந்ததால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த நிலையில் தனது மகன் இறந்திருப்பதால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    சிவராம கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தங்களின் ஊர் திருவிழாவுக்கு குரூப் டி-சர்ட் அடித்துள்ளனர். அதற்கு சிவராம கணேஷ் பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சிவராம கணேஷ் தனது நண்பர்கள் 3 பேர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவரிடம் டி-சர்ட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தது தொடர்பாக நண்பர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த சிவராம கணேசின் நண்பர்கள், அங்கு கிடந்த தென்னை மட்டையால் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் காயமடைந்தாலேயே சிவராம கணேஷ் இறந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சிவராம கணேஷ் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பிளஸ்-2 மாணவர்கள் ஆவர். மற்றொருவர் கூலி வேலை பார்த்து வரும் 18 வயது மதிக்கத்தக்கவர் ஆவார்.

    Next Story
    ×