என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேல்சபை எம்.பி. பதவியை குறிவைக்கும் தே.மு.தி.க.: பா.ஜனதா பக்கம் சாயுமா? அ.தி.மு.க.வுடன் சேருமா?
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தோல்வியை சந்தித்து இருந்தது.
- பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை பிரேமலதா நேரில் சென்று சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் கால் பதிக்க வேண்டும் என்று அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பாராளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தையின்போது மேல் சபை எம்.பி. பதவியை கேட்டு பெறுவது என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இதனை வலியுறுத்தி எந்த கட்சி மேல்சபை எம்.பி. பதவியை தர ஒத்துக்கொள்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என தே.மு.தி.க. முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தே.மு.தி.க.வை தங்களது கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு பாரதிய ஜனதா கட்சியும், அ.தி.மு.க.வும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் எனவே அந்தக் கட்சியுடன் இணக்கமாக சென்று மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு பெற வேண்டும் என்றும் தே.மு.தி.க.வில் ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்ப்பதே நல்லது என்றும் இன்னொரு பிரிவினர் கருத்து கூறி வருகிறார்கள். எனவே பா.ஜ.க. பக்கம் சாய்வதா? இல்லை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதா? என்பது பற்றி தே.மு.தி.க. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை பிரேமலதா நேரில் சென்று சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் பண்டிகையை யொட்டி நடைபயண நிறைவு விழாவை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அந்த விழாவில் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியை தே.மு.தி.க. முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர் மறுத்தார். கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. விரைவில் முடிவெடுக்கும் என்றும், யாரையும் சந்திக்க நாங்கள் இப்போது திட்டமிடவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் தே.மு.தி.க.வின் கூட்டணி முடிவு என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






