என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பர்கூர் மலைப்பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் 4 பேர் பலி

    பர்கூர் மலைப்பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலையின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமம் தம்முரெட்டி. இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித்தொழிலாளர்களே.

    எனவே இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு விவசாய வேலைக்காக காலையில் சென்றுவிட்டு மாலையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி விடுவார்கள். பர்கூர் மலைப்பகுதியில் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், கார், சரக்கு வாகனம் உள்பட ஏதாவது ஒரு வாகனத்தில் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் தம்முரெட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்களான சிக்கப்பன் (வயது 40), தேவராஜ் (45), தொட்டப்பி (35), ஜோகன் (35), ஜோகி (45), போலன் (45) உள்பட 14 பேர் அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதிக்கு விவசாய வேலைக்காக புறப்பட்டனர். இதற்காக தம்முரெட்டியை சேர்ந்த மாதேவன் (42) என்பவரின் காரில் வட்டக்காடுக்கு சென்றனர். காரை மாதேவன் ஓட்டினார்.

    பர்கூரை அடுத்த மணியாச்சி பள்ளம் அருகே ஒரு கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சிக்கப்பன், தேவராஜ், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் மாதேவன் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அங்கு ரோந்து வந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விவசாய வேலைக்கு சென்ற தொழிலாளர்களில் 4 பேர் விபத்தில் இறந்த சம்பவத்தால் தம்முரெட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
    Next Story
    ×