search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட தாமரைச்செல்வி, லட்சுமி.
    X
    கைது செய்யப்பட்ட தாமரைச்செல்வி, லட்சுமி.

    புவனகிரி அருகே கள்ளக்காதலனை கொன்று வீசிய பெண்- தாயுடன் கைது

    ஆபாச படத்தை கணவரிடம் காட்டுவேன் என்று மிரட்டியதால் கள்ளக்காதலனை கயிற்றால் இறுக்கி கொன்றேன் என்று கைதான இளம்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 24). எம்.எஸ்.சி. பட்டதாரி.

    இவர் போலீஸ் நண்பர் குழுவில் இருந்து வந்தார். பின்னர் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கருவை காட்டு பகுதியில் சீனிவாசன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவரது பின்தலையில் காயம் இருந்ததால், அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு உடலை கருவை காட்டு பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கீரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி முன்பு கீரப்பாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தாமரைச் செல்வி (26) சரணடைந்தார்.

    அப்போது அவர், சீனிவாசனை நானும், எனது தாய் லட்சுமியும் சேர்ந்து கொன்றோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து சரணடைந்த தாமரைச்செல்வியை புவனகிரி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    போலீசார் தாமரைச் செல்வியை கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நான் 2 குழந்தைகளுடன் கீரப்பாளையத்தில் வசித்து வருகிறேன். 1½ ஆண்டுக்கு முன்பு சீனிவாசனை சந்தித்தேன். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தோம். அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இதனால் நான், கள்ளக்காதலன் சீனிவாசனிடம், இனிமேல் இங்கே வராதே என்று கூறினேன். ஆனால், அவர் நாம் உல்லாசமாக இருந்த படத்தை செல்போனில் படம் பிடித்துள்ளேன். அதை உனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என்றும், இணைய தளங்களில் வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினார்.


    இதனால் நான் பயந்தேன். அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இது குறித்து எனது தாய் லட்சுமியிடம் கூறினேன். அவரும் உடனே எனது வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் சீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். அதன்படி அவரும் இரவு வந்தார்.

    அப்போது சீனிவாசனுக்கும், எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆத்திரம் அடைந்த நான் சீனிவாசனை கீழே பிடித்து தள்ளினேன். இதில் அவர் தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மயங்கி கிடந்த சீனிவாசனின் கழுத்தில் நானும், எனது தாய் லட்சுமியும் சேர்ந்து கயிற்றால் இறுக்கினோம். சிறிது நேரத்தில் சீனிவாசன் மூச்சுத்திணறி இறந்து விட்டார்.

    பின்னர் அவரது உடலை நாங்கள் இருவரும் அருகில் உள்ள கருவை காட்டுக்கு தூக்கி சென்று அங்கு வீசினோம். பின்னர் அவர் வைத்திருந்த செல்போனையும் உடைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாமரைச்செல்வியின் தாய் லட்சுமியை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். லட்சுமி, தாமரைச்செல்வி ஆகிய 2 பேரையும் சிதம்பரம் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×