search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு சீரமைக்கப்படுவதை மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
    X
    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு சீரமைக்கப்படுவதை மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

    நந்தனத்தில் 3-ந்தேதி திமுக-காங் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு பாராட்டு விழா

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாள் விழா வருகிற 3-ந்தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.

    இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை தென்சென்னை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விழாவுக்காக 120 அடியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. அதை 3 மேடைகளாக வடிவமைக்கிறார்கள். நடுமேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்வார்கள்.

    இன்னொரு மேடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் அமர்வார்கள். மற்றொரு மேடையில் புதிதாக வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.

    மேடையின் முன்பு 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அதேபோல் 100 அடி உயரத்தில் தி.மு.க. தலைவரின் வண்ண மின்விளக்கு கட்-அவுட் அமைக்கப்படுகிறது.

    மேலும் 70 அடி உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் உதயசூரியன் வடிவ ஒளி விளக்குகள் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் மேடை அருகில் 70 அடி உயரத்தில் 12 கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இடம் பெறுகிறது. இந்த கம்பங்களில் ஏற்றுவதற்கான அனைத்து கட்சிகளின் கொடிகளும் பூனாவில் தயாராகி வருகிறது.

    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு உள்ளது. 45 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த வளைவையும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கின்றனர். அந்த பணிகளை மாவட்ட செயலாளரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அவருடன் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×