search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு
    X

    அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு

    அ.தி.மு.க.,-பா.ஜ.க. கூட்டணியின் வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும் என அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #parliamentelection #admk #thangatamilselvan

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பகுதி செயலாளர் வீரமணி வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அ.ம.மு.க. வில் உள்ளனர். மத்திய, மாநில அரசு மீது மக்கள் அதிருப்தி உள்ளது. பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் அ.ம.மு.க.விற்கே வந்து சேரும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆட்சியை எதிர்க்க திராணி இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை பார்த்தால் ராமதாஸ், அன்புமணி ஆகிய. இருவரும் தமிழகத்தை விட்டே வெளியேறும் நிலை உருவாகும். அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் நோட்டாவிற்கு கீழ் செல்லும்.

    இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும் என்பதை அ.ம.மு.க. நிர்ணயிக்கும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுப்போம். அடிமை அரசின் அவலத்தால் மத்தியஅரசு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    ஆர்.கே.நகரை போன்று வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க.விற்கே வெற்றி எளிதில் கிட்டும். இளம் வாக்காளர்கள் அ.ம.மு.க.வின் பக்கமே உள்ளனர்.

    மெகா கூட்டணி, மேஜிக் கூட்டணி அமைத்தாலும் வெற்றி அ.ம.மு.க. விற்கே, அடுத்த ஆட்சி அ.ம.மு.க.வின் ஆட்சி தான் என்பதை பொதுமக்களே கூறுகின்றனர். அ.ம.மு.க. ஒன்றரை ஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

    தீப்பெட்டி கூட எடுத்துச் செல்ல முடியாத காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென தாக்குதல் நடத்துவதற்கான சூட்சுமம் என்ன? பாராளுமன்ற தேர்தல் வருமா? போர் வருமா? என்ற நிலை உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை தழுவும், அ.ம.மு.க. 40 இடங்களிலும் வெல்லும்.

    ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்த நிலையில் அம்மா இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என்ற நிலை உள்ளது.

    எனவே ஆணையம் விசாரணை முடிவுக்கு வரவில்லை. தர்ம யுத்தம் நடத்திவிட்டு தற்போது ஆணையத்தில் ஆஜராகாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலம் தாழ்த்தி வருகிறார்.

    வழக்கை முடிக்காமல் பா.ஜ.க.. அ.தி.மு.க. மூடி மறைக்கிறது. மக்களவை தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாத் துரை, அமைப்பு செயலாளர் சோழன் பழனிச்சாமி, ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முத்துராஜா, ஆசைத்தம்பி, சங்கேஸ்வரன், பி.முருகன், முருகன், ரங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி, சூரி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். #parliamentelection #admk #thangatamilselvan

    Next Story
    ×