என் மலர்
செய்திகள்

ஆர்கேநகர் எம்எல்ஏ பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்- அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு
திருவாரூர்:
திருவாரூரில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தினகரன் அணியின் வலங்கைமான் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணையன், அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சி போய்விடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிய கனவு கண்டார். அதனால் நேரடியாக ஆட்சிக்கு வந்து விடலாம் என எண்ணினார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் பிறர் கேலி செய்யும் அளவிற்கு போய் விட்டது.
ஸ்டாலின் கண்ட கனவு ஒருபோதும் பலிக்காது. ஸ்டாலினின் கனவுக்கு துணை போனவர் டி.டி.வி.தினகரன். ஸ்டாலினும் தினகரனும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கூட்டாக சேர்ந்து சதி செய்தனர். அவர்கள் இருவர் கண்ட கனவும் பலிக்கவில்லை. இனியும் ஒரு போதும் பலிக்காது.
18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிக் கொண்டிருந்த தினகரனுக்கு ஐகோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இனி யார் நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மேலும் தன்னுடைய சுயலாபத்திற்காக 18 பேரின் அரசியல் வாழ்க்கையை வீணடித்தவர் தினகரன். அரசியலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்.
தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அந்த பகுதி மக்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த 2 தொகுதி மட்டுமல்ல, 20 தொகுதிக்கும் உடனடியாக இடைத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். #ministerkamaraj #dinakaran #mkstalin #rknagar