search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை உள்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை
    X

    மதுரை உள்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை

    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை உள்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
    ராமநாதபுரம்:

    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்தது.

    ராமநாதபுரம் நகர், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.

    ராமேசுவரத்தில் நள்ளிரவு 2 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பலத்த காற்றுடன் கடல் சீற்றம் இருந்ததால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோவில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலையும் மழை நீடித்ததால் மாணவ -மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.


    சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் கண்மாய், ஏரி, குளங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காளையார்கோவில், காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்புவனம்- 148.6

    தேவகோட்டை- 2.2

    காளையார்கோவில்- 9.8

    சிங்கம்புணரி- 13.6

    விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத போதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    ராஜபாளையத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் லேசான மழை இருந்தது.

    மாவட்டத்தின் உள்பகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மதியம் முதல் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான், மேலூர், நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம், ஆண்டிப்பட்டி, திருமங்கலம், விரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இன்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    உசிலம்பட்டி- 26.20

    மதுரை தெற்கு- 40.30

    விரகனூர்- 110.50

    விமான நிலையம்- 21.20

    இடையபட்டி- 57.20

    புலிப்பட்டி- 8.40

    சோழவந்தான்- 30.10

    கள்ளிக்குடி- 12.20

    மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 853.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×