search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு போராட்டம் நடந்த காட்சி.
    X
    கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு போராட்டம் நடந்த காட்சி.

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்- கலெக்டர் முற்றுகை

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடு புகார் கூறியதால் மோதல் ஏற்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன.
    சென்னை:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு 133 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இதில் 2 தரப்பினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆனால் ஒரு தரப்பினரின் 11 பேர் தேர்வு செய்யப்பட்டதாக நோட்டீசு போர்டில் ஒட்டப்பட்டதாக தெரிகிறது.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பவானி-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    இதில் 11 பேரின் வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டது. மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் அதிகாரி கூறவில்லை.

    இதனை கண்டித்து சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

    டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 17 பேர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்தனர். தேர்தல் அதிகாரியை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்து சென்றுவிடாதவாறு சிறை பிடித்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    கணக்கம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலும் உறுப்பினர்கள் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

    சென்னிமலையில் உள்ள ஜீவா நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு விளக்கம் கோரி உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மாபாளையம் பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோபி அருகே உள்ள எருமைக்காரன் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சில அடையாளம் தெரியாத நபர்கள் வந்தனர். அவர்கள் வேட்பு மனுக்களை பார்வையிட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு மறுத்ததால் வேட்பு மனுக்களை பிடுங்கி கிழித்து எரிந்து விட்டு ஓடி விட்டனர்.

    கோபி அருகே உள்ள எருமைக்காரன் பாளையம் புதூர் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது.

    சங்கத்தின் முன்பு ரதிமலர் என்பவர் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக பழனிசாமி என்பவர் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தினேஷ் குமார் உள்பட 8 பேர் வந்தனர்.

    அவர்கள் பழனிசாமியிடம் வாக்குவாதம் செய்து அவரை கற்களால் தாக்கினர். கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து போலீசில் பழனிசாமி புகார் செய்தார். அதன் பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குவதற்கான நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. அப்போது தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் திருநாவலூர் கூட்டுறவு கடன் சங்க தேர்தலை முறையாக நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    கச்சிராயப்பாளையம் அருகே உள்ள வடக்க நந்தலில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்று, இறுதி பட்டியல் வெளியாக இருந்தது. ஆனால் தேர்தல் அலுவலர் ராமதாஸ் சங்கத்துக்கு வரவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன், மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீசில் புகார் அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ரிஷிவந்தியம் ஒன்றியம் சித்தால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய வராத தேர்தல் அதிகாரியை கண்டித்து, மனுதாக்கல் செய்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வேட்பு மனு பரிசீலனைக்கு அதிகாரி வரவில்லை. நீண்ட நேரமாக வராததால் தி.மு.க., காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் தேர்தல் அதிகாரி வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் தேர்தல் அதிகாரியின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    மன்னார் குடியை அடுத்த பரவாக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தேர்தல் அதிகாரி வரவில்லை.

    இதை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதேபோல் திருத்துறைப்பூண்டி நகர கூட்டுறவு வங்கியை தி.மு.க.வினர் பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பழனி அருகே ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல்நடைபெற்றது. தேர்தல் அலுவலர் நடராஜன் முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்துபவர்கள் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் தேர்தல் அலுவலர்கள் இறுதி பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என கூறினர். இதைப்பார்த்த தி.மு.க. உறுப்பினர்கள் இறுதிப்பட்டியல் முறையாக தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் சேர்ந்து தேர்தல் அலுவலர்களிடம் இருந்த வேட்புமனுக்களை பிடுங்கி கிழித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த தேர்தலின் போது சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    ஆனால் தேர்தல் அலுவலர் கருப்புச்சாமி இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் அலுவலருடன் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்ததோடு வேட்புமனுக்களையும் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதற்கிடையே தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தேர்தல் அலுவலர் கருப்புச்சாமி அறிவித்தார்.

    மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் 11 இயக்குநர்கள் பதவிக்கு கடந்த 30-ந்தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

    66 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 47 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் மாசானம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மனு தள்ளுபடியானவர்கள் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அலுவலகத்துக்கு வெளியே இருந்த நாற்காலிகளை உடைத்தனர்.

    இது தொடர்பாக வங்கியின் செயலாளர் ராதா கிருஷ்ணன் பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×