search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவலூர் அருகே இடி தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் உள்பட 2 பேர் மரணம்
    X

    திருநாவலூர் அருகே இடி தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் உள்பட 2 பேர் மரணம்

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே இடி தாக்கியதில் 9-ம் வகுப்பு மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகஇருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. திருநாவலூரை அடுத்த எம்.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி சகுந்தலா (வயது 50). இவரும், அதே பகுதியை சேர்ந்த சுப்புராயன் மகன் கலையரசன் (15) என்பவரும்இன்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மழையில் நனைந்த படி நடந்து சென்று கொண்டிருந்த சகுந்தலா, கலையரசன் மீது இடி தாக்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிதாக்கி பலியான சகுந்தலா, கலையரசன் ஆகிய 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இடி தாக்கி பலியான கலையரசன் எம்.குன்னத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். இடி தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கண்டமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பெய்த இந்த மழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. காற்று வேகமாக வீசியதால் சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.

    இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்துறை ஊழியர்கள் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சூறைக்காற்றினால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    Next Story
    ×