search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவிழாவில் தொலைந்த பிள்ளைகள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்- அமைச்சர் உதயகுமார்
    X

    திருவிழாவில் தொலைந்த பிள்ளைகள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்- அமைச்சர் உதயகுமார்

    செக்கானூரணியில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில், திருவிழாவில் தொலைந்த பிள்ளைகள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில் அ.தி.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.டி.மணி தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், சரவணன், பெரியபுள்ளான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    திருவிழாவின் போது பஞ்சுமிட்டாய் மற்றும் பலூன் விற்பவர்களை பார்த்து அவருடன் சென்று காணாமல் போகும் குழந்தைகள் போல் எங்களது கழகத்திலும் தொலைந்து விட்ட உறவுகள் திரும்பி வந்தால் தாய் உள்ளத்தோடு அவர்களை ஏற்றுக்கொண்டு எங்கள் தாய் தந்தை கழகத்திடம் சேர்ப்போம்.

    எதிர்க்கட்சிகள் இந்த அரசு இப்பொழுது முடியும் என கூக்குரலிட்ட போது அம்மாவின் அரசு முதலமைச்சர் எடப்பாடியாரால் ஓராண்டு கடந்து சாதனை படைத்துள்ளது.

    இந்த ஓராண்டில் ஏழைகளின் தலை எழுத்தை மாற்றுவதற்காக 5 ஆயிரத்து 208 கோப்புகளில் கையெழுத்திட்டு மக்களின் வாழ்வை மாற்றி காண்பித்துள்ளார்.

    எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதற்காக காவிரி பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். 215 ஆண்டு களாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது.

    காவிரி நீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்பதை மாற்றி உச்சநீதிமன்றம் தலையில் அடிப்பதை போல காவிரி நதிநீர் பொது சொத்து என கர்நாடக மாநிலத்திலிருந்து சாவியை புடுங்கி மத்தியஅரசிடம் கொடுத்திருக்கிறார்கள்.

    இந்திய அரசு வரலாற்றில் ஒரு தமிழனுடைய உரிமை பிரச்சனைக்காக சுதந்திரத்திற்கு பின் மாநில உரிமைக்காக 22 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கி காட்டியஅரசு அம்மாவின் அரசு ஆகும்.

    உரிமைக்கு குரல் கொடுக்கின்ற நேரத்தில் உறவுக்கு கை கொடுக்கிறோம். உறவுக்கு கை கொடுக்கிற காரணத்தினால் தான் “பஸ்போர்ட்” மதுரைக்கு வந்துள்ளது.

    “நான் “விசில்” என்ற செயலியை ஆரம்பித்திருக்கிறேன்” என கமல் சொல்கிறார். அவர் வீட்டிலேயே குறை உள்ளது. அதை எதிலே சொல்வது?

    கிராமசபை கூட்டமே நடைபெறவில்லை என கமல் கூறுவது அவர் வேறு உலகத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

    வருடத்திற்கு 4 முறை கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. யாரோ எழுதி கொடுத்ததை கமல் கூறுகிறார். கிராமசபை கூட்டத்தை கிராமத்தில் நடத்தாமல் தலைநகர் சென்னையில் நடத்துகிறார்.

    இங்கு முதலமைச்சர் சீட்டு காலியில்லை. காலியான பின் நீங்கள் முயற்சி செய்யலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் தியாகு, மாவட்ட துணைச்செயலாளர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், ஒன்றியசெயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், நகரசெயலாளர் விஜயன், முன்னாள் தொகுதிசெயலாளர் ஆண்டிச்சாமி, வக்கீல்கள் திருப்பதி, ரமேஷ் மற்றும் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×