search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு - விவசாயிகள் கவலை
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு - விவசாயிகள் கவலை

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    சேலம்:

    கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    நேற்று 72 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 60 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    அணையில் மிக குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் உள்ளதால் நந்தி சிலை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.

    அணையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அந்த பகுதிகளில் சோளம் உள்பட பல பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது.

    பயிரை காப்பாற்றும் நோக்கத்தில் விவசாயிகள் சிலர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகிறார்கள். ஆனாலும் பயிரை காப்பாற்ற முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விட்டால் தான் அந்த நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×