search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    X

    மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    திருவாரூர் அருகே கண்கொடுத்தவணிதத்தில் புதிய டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு, பிளாஸ்டிக் சேர்களை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர்:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள கண்கொடுத்தவணிதம் கடைவீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடையால் பெண்கள், பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கிராமக்களிடம், டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த 25-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தி அன்று முதல் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

    ஆனால் கண்கொடுத்தவணிதம் ஊருக்கு வெளியில் பாண்டவையாறு கரையில் புதிய டாஸ்மாக்கடை அமைப்பதற்கு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த இடத்தில் டாஸ்மாக்கடை அமைக்க கூடாது என கிராம மக்கள் தடுத்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கடை வாசலில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை எடுத்து வந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மது விற்றவர்கள் அங்கிருந்து மதுபாட்டில்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அப்போது மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண் ஒருவர் மதுக்கடையை திறந்தால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார். இதனைதொடர்ந்து போலீசார் பெண்களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×