என் மலர்
விளையாட்டு

அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது- இந்திய வீராங்கனை ஜெமிமா
- நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன்.
- கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு உள்பட 26 ரன்கள் கிடைத்தது.
மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்குஎதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது.
மேலும் மகளிர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, 127 ரன்கள் திரட்டி ஆட்டநாயகியாக ஜொலித்த இந்திய மிடில் வரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.
இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.






