என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரசிகர்களை அமைதியாக்குவோம்: பேட் கம்மின்ஸ் பாணியில் பதில் கூறிய தென் ஆப்பிரிக்க கேப்டன்
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
- முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், "இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம். இது மைதானத்தை அமைதியாக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க கேப்டனின் இந்த பேச்சு 2023 இல் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸின் பேச்சை நினைவுபடுத்தியது.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசிய பேட் கம்மின்ஸ், "1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும்" என்று கூறினார்






