என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம் கான்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரம்: கோலி மீது தான் தவறு- இந்திய முன்னாள் வீரர்கள் கருத்து
- சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.
- கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி நேருக்கு நேராக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் விராட் கோலி மீதுதான் தவறு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர்களாக இர்பான் பதான், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியதாவது:-
கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது. களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு, சக வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.
ஹெய்டன், கில்கிறிஸ்ட் உள்ளிட்டோர் எங்களுக்கு 19 வயதாகிய போது, பின்னால் இருந்து கொண்டு வார்த்தைகளால் ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் ஒருநாளும் எங்களை தொட்டதில்லை. அதனால் விராட் கோலி சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் உரசியதை தவிர்த்திருக்க வேண்டும்.
எனக்கு ஒரு கேள்வியும் இருக்கிறது. ஒருவேளை விராட் கோலியின் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருந்து, சாம் கோன்ஸ்டான் இடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த 19 வயதான வீரரின் அறிமுகப் போட்டியில் இப்படியான சம்பவம் நிகழ்ந்திருந்தால் நாம் ஏற்போமா.. அப்படிதான் இதனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில்:-
விராட் கோலி நிச்சயம் இதை செய்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசல் உள்ள தெருவில் ஒருவர் நடந்து சென்றால் கூட ஒருவர் எதிரில் வரும்போது நாம் வழிவிடலாம். வழி விடுவதால் நாம் யாருக்கும் குறைந்தவர் கிடையாது. கிரிக்கெட் களத்தில் இது போன்ற சம்பவங்களை யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள். என்னை பொறுத்தவரை கோலி இதை செய்திருக்கக் கூடாது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறியதாவது:-
தேவையில்லாத ஒரு விஷயத்தை விராட் கோலி செய்துவிட்டார். இப்படி நடந்திருக்க வேண்டியது இல்லை. இது போன்ற சம்பவங்களை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் விராட் கோலி ஏன் இவ்வாறு செய்தேன் என்று ஒரு விளக்கத்தை அவர் வைத்திருப்பார். ஆனால் இது போன்ற விஷயங்களை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.






