என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு ரோகித், கோலி இதை செய்ய வேண்டும்- பிசிசிஐ விருப்பம்
- விராட் கோலி ஒருநாள் போட்டியில் 14,181 ரன்னும் ரோகித் சர்மா 11,168 ரன்னும் எடுத்துள்ளனர்.
- இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
புதுடெல்லி:
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 20 ஓவர் மற்றும் டெஸ்ட்களில் ஓய்வுபெற்ற போதிலும் இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இந்திய அணி அடுத்து ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியிலும், அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் ஆடுகிறது. இதன் பிறகுதான் இந்தியாவுக்கு ஒருநாள் போட்டி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை (பொ்த், அடிலெய்டு, சிட்னி) 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம் பெறுவார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொட ருக்குமுன்பு ரோகித்சர்மாவும், விராட்கோலியும் இந்தியா 'ஏ' அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான 3 போட்டிகள் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் 5-ந்தேதிகளில் கான்பூரில் நடக்கிறது. இதில் இருவரும் ஆட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. வலியுறுத்தி உள்ளது. இதே போல் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடலாம் என கூறப்படுகிறது.
விராட் கோலி ஒருநாள் போட்டியில் 14,181 ரன்னும் (51 சதம், 74 அரை சதம்), ரோகித்சர்மா 11,168 ரன்னும் (32 சதம், 58 அரை சதம்) எடுத்துள்ளனர். இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.






