என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: 7-வது வரிசையில் ஆடியது ஏன்? - ரிஷப் பண்ட் விளக்கம்
- ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனை வீரரான ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
- லக்னோ அணியின் கேப்டனான அவர் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 7-வது வீரராக களம் இறங்கினார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனை வீரரான ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பி வருகிறார். லக்னோ அணியின் கேப்டனான அவர் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 7-வது வீரராக களம் இறங்கினார். 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அடைந்தார்.
தனது பேட்டிங் மோசமாக இருப்பதால் ரிஷப் பண்ட் வழக்கமான 4-வது வரிசையில் ஆடாமல் 7-வது வரிசையில் கடைசியாக வந்தார். இது அவரை மேலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருந்தது.
தோல்வி தொடர்பாகவும், 7-வது வீரராக ஆடியது பற்றியும் ரிஷப்பண்ட் கூறியதாவது:-
நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்தோம். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆடுகளம் எப்போதுமே 2-வது களம் இறங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. லக்னோ பிட்சில முதலில் பேட்டிங் செய்யும் போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், 2-வது இன்னிங்சின் போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.
இந்த ஆட்டத்திலும் அதே நிலைதான் ஏற்பட்டது. இதற்காக நாம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது. ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
7-வது வரிசையில் நான் ஆடுவதற்கு காரணம் இருக்கிறது. அப்துல் சமத்தை முன்கூட்டியே களம் இறக்க முடிவு செய்தோம். அதன் பிறகு மில்லர் வந்தார். அதனால்தான் 7-வது இடத்தில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் சிறந்த லெவனை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறினார்.
5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளியுடன் 5-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி தனது 10-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 27-ந் தேதி சந்திக் கிறது.






