என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2025: சென்னை-மும்பை அணிகள் மீண்டும் இன்று மோதல்
    X

    IPL 2025: சென்னை-மும்பை அணிகள் மீண்டும் இன்று மோதல்

    • சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும்.

    மும்பை:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். குறைந்தது 8 வெற்றிகள் பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்றை நினைத்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியை (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) சந்தித்துள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது.

    மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (265 ரன்), திலக் வர்மா (231), விக்கெட் கீப்பர் ரையான் ரிக்கெல்டன் (180 ரன்) உள்ளிட்டோர் பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 6 ஆட்டங்களில் ஆடி 82 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். அவரது பேட்டில் இருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படுமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (11 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பழைய பார்முக்கு திரும்பி கொண்டிருக்கிறார். சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் பலமாகும்.

    சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 167 ரன் இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து சென்னை அணி எட்டிப்பிடித்தது. புதிய தொடக்க ஜோடி ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத் ஆகியோர் அளித்த திடமான தொடக்கமும், ஷிவம் துபே, கேப்டன் டோனியின் பொறுப்பான பேட்டிங்கும் அணியை கரைசேர்த்தது.

    சென்னை அணிக்கு பேட்டிங் தான் பெரும் தலைவலியாக உள்ளது. மிடில் வரிசையில் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் துடிப்பாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா வலு சேர்க்கிறார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டி நிற்பார்கள்.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    ஒட்டுமொத்த ஐ.பி.எல்.-ல் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், சென்னை 18 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் வான்கடே மைதானத்தில் 12 முறை சந்தித்ததில் மும்பை 7-5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    சென்னை: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், டோனி (கேப்டன்), ஜாமி ஓவர்டான், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×