என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விடுவித்த இந்தியா.... ஒப்பந்தம் செய்த பாகிஸ்தான்... பி.எஸ்.எல். தொடரில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மான்!
    X

    விடுவித்த இந்தியா.... ஒப்பந்தம் செய்த பாகிஸ்தான்... பி.எஸ்.எல். தொடரில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மான்!

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
    • இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

    2026 இந்தியன் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தநிலையில், கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கானை இந்து தலைவர்கள் பலரும் தேசத்துரோகி என விமர்சித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பிசிசிஐ தலையீடு காரணமாகவும் முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் விளையாடமாட்டோம் எனவும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் எனவும் தெரிவித்தது.

    ஆனால் ஐசிசி அதன் கோரிக்கையை ஏற்காததால், வங்கதேசம் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசம் நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டால், பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் பங்கேற்காது எனத் தெரிவித்து, தங்கள் அணியின் முடிவை அரசுதான் எடுக்கும் என்றும், இது இரட்டை நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த ஐசிசி பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்தது. தொடர்ந்து அணி போட்டிகளில் விளையாடியும் வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி கொழும்புவில் பிப்ரவரி 15, 2026 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 11-வது சீசனில் விளையாடுவதற்காக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், லாகூர் குவாலண்டர்ஸ் அணியால் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியின் ஒரு பகுதியாக முஸ்தபிசுர் இருந்துள்ளார்.

    Next Story
    ×