என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அரைசதத்தை தவறவிட்ட நிதிஷ்.. சதத்தை நோக்கி கில்.. 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 427/4
- சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.
அடுத்து வந்த நிதிஷ் குமார், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவ்வபோது பவுண்டரியும் சிகருமாக பறக்க விட்டார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்து அசத்தினார்.
அதிரடியாக விளையாடி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் 43 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஜூரல் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.






