என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இன்று IND vs PAK போட்டி: அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு?
- அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா? என்பது போட்டிக்கு சற்று முன்பு தான் தெரிய வரும்.
- கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்
20 நாடுகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
ஏ பிரிவில் உள்ள இரு அணிகளும் தாங்கள் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாகவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இதே உத்வேகத்துடன் பாகிஸ்தானையும் தோற்கடிக்கும் வேட்கையில் சூர்யகுமார் யாதவ் அணி இருக்கிறது.
அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா? என்பது போட்டிக்கு சற்று முன்பு தான் தெரிய வரும். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடத்தில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2 வேகப்பந்து வீரர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அதே கலவையுடன் இன்றைய ஆட்டத்தில் அணியின் தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேலுடன் குல்தீப் யாதவும் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் உஸ்மான் தாரிக் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று பாகிஸ்தான் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மழையால் ஆட்டம் கை விடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.






