search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி - ரோகித் சர்மா
    X
    விராட் கோலி - ரோகித் சர்மா

    ரோகித்சர்மா, கோலியை விட ஸ்டீவ் சுமித்துக்கு பந்து வீசுவது கடினம் - முகமது அமீர்

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும் இன்சுவிங் பந்து வீச்சுக்கு ரோகித் சர்மா தடுமாறுவார் என பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் கூறி உள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அணியின் முன்னனி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமது அமீர். 2010-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர் ஸ்பாட் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் சிக்கினார்.

    இதையொட்டி அவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பிறகு 2016-ல் மீண்டும் அணிக்கு திரும்பினார். 27 வயதில் அவர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் இதை அறிவித்தார்.

    பின்னர் தான் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக முகமது அமீர் கூறினார். 28 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் போட்டி மற்றும் ஐம்பது 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

    இந்தநிலையில் ரோகித்சர்மா, விராட் கோலியை விட ஸ்டீவ் சுமித்துக்கு பந்து வீசுவது சவாலானது என்று இடது கை வேப்பந்து வீரரான முகமது அமீர் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முகமது அமீர்

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவருக்கும் பந்து வீசிய போது எனக்கு சிரமம் ஏற்படவில்லை. ரோகித் சர்மாவுக்கு பந்து வீசுவது எனக்கு சுலபமானது. இரு வழிகளிலும் என்னால் அவரை அவுட் செய்ய முடியும்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும் இன்சுவிங் பந்து வீச்சுக்கு அவர் தடுமாறுவார். அதேபோல தொடக்கத்தில் பந்து ஆப்சைட் பக்கம் செல்லும் போது ரோகித் சர்மாவிடம் தடுமாற்றம் இருந்தது.

    விராட் கோலிக்கு பந்து வீசுவது ஓரளவு சிரமமானது. அழுத்தமான சூழ்நிலையில் அவர் நன்றாக விளையாடுபவர். மற்றப்படி இருவருக்கும் பந்து வீசியபோது எனக்கு கடினமாக இருந்ததில்லை.

    ஆனால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித்துக்கு பந்து வீசுவது எளிதல்ல. அவர் ஆடும் விதத்தால் பந்து வீசுவது கடினமாக இருக்கும். அவுட்சுவிங் வீசினால் பேட்டை மேலே தூக்கி அடிக்காமல் விட்டு விடுவார். கால்காப்பு பக்கம் வீசினால் ரன்களை எடுப்பார்.

    இவ்வாறு முகமது அமீர் கூறியுள்ளார்.

    Next Story
    ×