search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ரா, விராட் கோலி
    X
    பும்ரா, விராட் கோலி

    பும்ராவுக்கு இப்படி ஒரு சோதனையா?: வெறும் 75 ரன்களுடன் விராட் கோலியும் ஏமாற்றம்

    நியூசிலாந்துக்கு எதிராக 30 ஒவர்கள் வீசிய பும்ராவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத மோசமான சம்பவமாக இந்தத் தொடர் அமைந்துள்ளது.
    இந்தியா மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி தொடரை 5-0 என கைப்பற்றியது. நியூசிலாந்து சொந்த நாட்டிலேயே ஒயிட்வாஷ் ஆனது.

    அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்தத் தொடரில் நியூசிலாந்து 3-0 என வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்தத் தொடர் பும்ராவுக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. மூன்று போட்டிகளிலும் 30 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு ஓவரை மட்டுமே மெய்டனாக வீசினார். 167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.

    பும்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இந்தத் தொடருக்கு முன்பு வரை குறைந்தது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தாமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தத் தொடரில் பும்ரா மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    அதேபோல் விராட் கோலிக்கும் இந்தத் தொடர் மோசமானதாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 25 ஆகும். முதல் போட்டியில் 51 ரன்கள் அடித்த விராட் கோலி 2-வது போட்டியில் 15 ரன்களும், இன்றைய 3-வது போட்டியில் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

    2015-க்குப் பிறகு விராட் கோலியின் மிகக் குறைந்த சராசரி இதுதான். இந்த இரண்டு பேரின் மோசமான செயல்பாடுதான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
    Next Story
    ×