search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.வி.சிந்து
    X
    பி.வி.சிந்து

    திருமணம் பற்றி தற்போது சிந்திக்கவில்லை: பி.வி.சிந்து

    நான் தற்போது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை, ஒலிம்பிக்கில் நாட்டுக்காக தங்க பதக்கம் வெல்வதே என்னுடைய குறிக்கோள் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.
    மைசூரு :

    உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 29-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தசரா விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இளைஞர் தசரா விழா, மைசூரு மகாராஜா கல்லூரியில் தொடங்கியது. இதில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொண்டு இளைஞர் தசரா விழாவை தொடங்கி வைத்தார். விழா முடிவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கன்னடத்தில் பேசி அங்கிருந்தவர்களை வியக்க வைத்தார். பேட்டியின்போது பி.வி.சிந்து கூறியதாவது:-

    அனைவருக்கும் வணக்கம். தசரா விழாவில் நான் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மைசூருவுக்கு வருவது இதுதான் முதல் முறை. மைசூரு நகரம் மிகவும் தூய்மையான நகரம் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    ஆனால் நேரில் பார்க்கும்போது தான் தெரிகிறது மைசூரு எவ்வளவு அழகான நகரம் என்று. மைசூரு நகரை பார்க்க, பார்க்க ஆனந்தமாகவும், வியப்பாகவும் உள்ளது. மைசூருவில் தான் துர்கா மாதா குடிகொண்டிருக்கிறார். இங்குள்ள அனைவரும் என்னை அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சத்தியமாக நான் இதுவரை என்னுடைய திருமணம் பற்றி தற்போது சிந்திக்கவில்லை. ஏனெனில் ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்காக தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்.

    பி.வி.சிந்து

    இந்திய அளவில் நடத்தப்படும் “கேலோ இந்தியா“ விளையாட்டு போட்டிகளின் மூலம் ஏராளமான திறமைகளுடன் கிராமப்புற மாணவ-மாணவிகள் சிறந்து விளங்குவது கண்டறியப்படுகிறது. அவ்வாறு கண்டறியப்படும் மாணவ- மாணவிகளுக்கு முறையான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் உலக அளவில் சாதிப்பார்கள். இதற்காகத்தான் “கேலோ இந்தியா“ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளிடையே உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளை அவர்களுடைய பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்தான் தங்களுடைய குழந்தைகளை விளையாட்டு போட்டிகளில் சாதிக்க உற்சாகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கிராமப்புற மாணவ- மாணவிகளின் திறமைகள் வெளியே தெரியவரும்.

    இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.
    Next Story
    ×