என் மலர்
விளையாட்டு
- அமெரிக்காவின் உள்ளூர் டி20 தொடர் அட்லாண்டா ஓபன் ஆகும்.
- இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரஹீம் கார்ன்வெல் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதலில் ஆடிய அட்லாண்டா ஃபயர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரக்கீம் கார்ன்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 77 பந்துகளில் 22 சிக்சர்கள், 17 பவுண்டரிகள் உள்பட 205 ரன்கள் குவித்து ஆட்டமிழ்க்காமல் உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 266.77. அடுத்து ஆடிய ஸ்கொயர் டிரைவ் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ரக்கீம் கார்ன்வெல் இதுவரை 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் பெங்களூரு அணியின் கிறிஸ் கெயில். இவர் 2013-ல் புனே வாரியர்சுக்கு எதிராக 175 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியால் அங்கீகரிக்கப்படாத போட்டியில் கார்ன்வெல் இந்த ரன்களை எடுத்ததால் இது சாதனைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
- அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்.
லக்னோ:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8 ரன்களில் துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. அதாவது ஷூப்மான் கில் 3 ரன்னிலும், கேப்டன் ஷிகர் தவான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களும், இஷான் கிஷன் 20 ரன்களும் சேர்த்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர்
அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். போதுமான ரன்ரேட் இல்லாமல் தவித்த நிலையில், சஞ்சு சாம்சன்-ஷர்துல் தாக்கூர் ஜோடி நம்பிக்கை அளித்தது. நெருக்கடிக்கு மத்தியில் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்த ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இதனால் ரன்ரேட் உயர்ந்தது. எனினும் இலக்கை எட்ட முடியவில்லை.
மறுமுனையில் ஆடிய ஷர்துல் தாக்கூர் 33 ரன்களில் அவுட் ஆனதையடுத்து, ஆட்டத்தின் போக்கு மாறியது. குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் வெளியேறினார். ஆவேஷ் கான் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

சஞ்சு சாம்சன்
கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை ஷாம்சி வீசினார். முதல் பந்து வைடு ஆனது. இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரவி பிஷ்னோய் சிக்சர் அடித்தார். இரண்டாவது மற்றும் 3வது பந்தில் சஞ்சு சாம்சன் பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் மொத்தம் 20 ரன்கள் அடித்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் மொத்தம் 86 ரன்கள் குவித்தார்.
கடைசி வரை போராடிய இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி 9ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.
- ஹென்ரிச் கிளாசென் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர்.
- இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட் எடுத்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்கள் ஜனனிமான் மாலன், குயின்டன் டி காக் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாலன் 22 ரன்களும், குயின்டன் டி காக் 48 ரன்களும் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். கேப்டன் பவுமா 8 ரன்களிலும், மார்க் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
அதன்பின்னர், அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
- விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமடைகிறேன் என பும்ரா கூறினார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ளது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட டாப் 16 அணிகள் களமிறங்குகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார். இந்த வருடம் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான டி20 தொடர்களில் ஓய்வெடுத்த பும்ரா அதையும் தாண்டி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் நாட்டுக்காக ஓய்வெடுத்து முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறி விடுவார் என்று ஆதாரங்களுடன் விமர்சித்தனர்.
இருப்பினும் யாராவது நாட்டுக்காக உலகக்கோப்பை போன்ற தொடரில் வேண்டுமென்றே காயமடைந்து வெளியேறுவார்களா? என்று சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவையும் கொடுத்தனர்.
இந்நிலையில் இதுபோன்ற தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் "உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் நீங்கள் கவனம் கொடுத்து நின்று அதன் மீது கல்லை தூக்கி எறிந்து கொண்டிருந்தால் உங்களால் எப்போதும் உங்களுடைய லட்சிய இலக்கைத் தொட முடியாது" என்று இருந்தது.
முன்னதாக காயத்திலிருந்து வெளியேறினாலும் இந்திய அணிக்கு எப்போதும் தம்முடைய ஆதரவு உண்டு என அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். டுவிட்டரில் கூறியதாவது:-
இந்த டி20 உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமடைகிறேன். ஆனால் எனது காயத்துக்காக எனது அன்புக்குரியவர்களிடமிருந்து நான் பெற்ற வாழ்த்துக்கள், அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. இங்கே குணமடைந்து கொண்டிருக்கும் நான் ஆஸ்திரேலியாவில் நம்முடைய அணியை உற்சாகப்படுத்துவேன் என்று கூறினார்.
தற்போது முதுகுப்பகுதியில் எலும்பு முறிவை ஏற்பட்டுள்ளதால் காயத்திலிருந்து குணமடைய 6 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானாலும் இதுவரை ஜஸ்பிரித் பும்ராவின் முழுமையான காயம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
- வங்களாதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 18.5 ஓவர்கள் தாக்கு பிடித்த மலேசியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 மட்டுமே எடுத்தது.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மலேசியா - வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்களாதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் எடுத்தது.
முர்ஷிதா காதுன், நிகர் சுல்தானா ஆகியோர் அரை சதம் அடித்தனர். மலேசியா அணி தரப்பில் சாஷா ஆஸ்மி, மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், வினிஃப்ரெட் துரைசிங்கம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசியா அணி களமிறங்கியது. வங்காள தேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 18.5 ஓவர்கள் தாக்கு பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 மட்டுமே எடுத்தது.
இதனால் வங்காள தேச அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்களாதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
- மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
லக்னோ:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார்கள்.
இந்திய அணி:-
ஷிகர் தவான், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான்
தென் ஆப்பிரிக்கா அணி:-
ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி
- புள்ளி பட்டியலில் 3 முதல் 6-வது இடம் வரை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும்.
- கொச்சியில் நாளை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.
கொச்சி:
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2013-14-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
9-வது இந்தியன் சூப்பர் லீக் (2022-23 சீசன்) கால்பந்து நாளை தொடங்குகிறது. சென்னையின் எப்.சி., ஏ.டி.கே. மோகன் பகான், பெங்களூரு எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா, ஈஸ்ட் பெங்கால் ஆகிய 11 அணிகள் விளையாடுகின்றன.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மொத்தம் 110 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.
புள்ளி பட்டியலில் 3 முதல் 6-வது இடம் வரை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இதிலிருந்து மேலும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கும் இப்போட்டி அட்டவணையில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை ரசிகர்கள் நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொச்சியில் நாளை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னையின் எப்.சி. அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடக்கிறது. சென்னை அணியின் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடித்தில் 14-ந்தேதி நடக்கிறது.
இது வரை ஏ.டி.கே. மோகன் பகான் அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. சென்னையின் எப்.சி. இரண்டு முறையும், பெங்களூரு, மும்பை சிட்டி, ஐதராபாத் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளன.
கடந்த சீசனில் ஐதராபாத் பட்டம் வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது.
- மழைப் பொழிவு காரணமாக டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்திய அணி ஆடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. லக்னோவில் இந்திய அணி ஆடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
இந்நிலையில் மழைப் பொழிவு காரணமாக டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் 2 மணிக்கு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோத இருந்த ஒருநாள் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார்.
- கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.
நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து சந்தீப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்தது. அவர் கடந்த மாதம் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தான் நேபாளம் திரும்பி விடுவேன் என்று அவர் கூறி இருந்தார். விசாரணையின் அனைத்து நிலைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறி இருந்தார்.

இதனையடுத்து நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அதன் பின், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவர் உடனடியாக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது.
- காம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்தது. 4 அணிகள் விளையாடிய இத்தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்திய கேப்பிடல்ஸ்-பில்வாரா கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது. ரோஸ் டெய்லர் 82 ரன்னும், மிட்செல் ஜான்சன் 62 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் பில்வாரா கிங்ஸ் அணி 18.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் காம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
- இந்திய அணி தனது லீக் ஆட்டத்தில் வருகிற 11-ந் தேதி அமெரிக்காவையும், 14-ந் தேதி மொராக்கோவையும், 17-ந் தேதி பிரேசிலையும் எதிர்கொள்கிறது.
புவனேஷ்வர்:
7-வது ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோருக்கான) இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் வருகிற 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, மொராக்கோ, பிரேசில் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது லீக் ஆட்டத்தில் வருகிற 11-ந் தேதி அமெரிக்காவையும், 14-ந் தேதி மொராக்கோவையும், 17-ந் தேதி பிரேசிலையும் எதிர்கொள்கிறது. இந்த 3 ஆட்டங்களும் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.
ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 21 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: மோனலிஷா தேவி மொய்ராங்தெம், மெலோடி சானு கெய்ஷம், அஞ்சலி முண்டா, பின்களம்: ஆஸ்டம் ஓரியன், காஜல், நகிதா, பூர்ணிமா குமாரி, வர்ஷிகா, ஷில்கி தேவி ஹிமான், நடுகளம்: பபினாதேவி லிஷம், நிது லிண்டா, ஷைலஜா, சுபாங்கி சிங், முன்களம்: அனிதா குமாரி, லிண்டாகோம் செர்டோ, நேஹா, ரிஜியாதேவி லைஷ்ரம், ஷீலா தேவி லோக்டாங்பாம், கஜோல் ஹூபெர்ட் டிசோசா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா திர்கே.
- நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.
- மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழக அணி 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 46 பதக்கங்கள் பெற்று இருந்தது.
நேற்று தமிழக அணிக்கு 4 தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தது. ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சுனைனா குருவில்லா தங்கம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் அபய்சிங் தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் அணிகள் பிரிவில் அபய்சிங், வேலவன் செந்தில்குமார், அரிந்தர் பால்சிங், நவனீத் பிரபு ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது.
மேலும் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு வெள்ளி கிடைத்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வேலவன் செந்தில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.
சுனைனா குருவில்லா, ரதிகா சீலன், சமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது.
டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். நீச்சல் போட்டியில் தமிழகத்துக்கு வெள்ளிபதக்கம் கிடைத்தது.
மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.






