என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

காதல் திருமணத்தில் வெற்றி பெறும் ஜாதக அமைப்பு
- கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம்.
- சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும்.
ஒரு ஜோதிடரை சந்திப்பவர்கள் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் இந்த 5 விசயங்களை கேட்காமல் செல்வது இல்லை. பூர்வ ஜென்ம புண்ணிய பலப்படி ஒரு ஜாதகரின் வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சம்பவங்களும் 5-ம் பாவகத்தில் தான் பதிவாகி இருக்கும். சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பது நிதர்சனமான உண்மை. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப் போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. இளம் பருவத்தினர் நான் காதல் திருமணம் செய்வேனா பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் செய்வேனா என்று அறிந்து கொள்ள விருப்புகிறார்கள்.
ஒரு ஜாதகத்தில் 5ம் அதிபதியே ஒருவருக்கு காதல் வருமா வராதா என்பதை தெரிவிக்கும் ஸ்தானமாகும். ஒருவரின் ஆழ்மன எண்ணங்களை குறிக்கும் ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் இடத்தை பார்த்த கிரகமும் ஐந்தாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் அதிபதியும் காதலை தீர்மானிக்கிறார்கள். ஒரு பாவக அதிபதி எந்த பாவத்தில் நிற்கிறாரோ எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறார்களோ அது தொடர்பான பலன்களே ஜாதகருக்கு நடக்கும்.
மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரினால் நிச்சயிக்கப்படும் திருமணமா? அல்லது ஜாதகரின் விருப்ப திருமணமா? என்பதை எளிதாக கூற முடியும். ஒருவருக்கு காதல் திருமணம் நடைபெற பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்று இருக்க வேண்டும். இதை சஞ்சித கர்மா என்று கூறலாம். சஞ்சித கர்மா என்பது ஒருவரின் கடந்த கால செயல்களின் மொத்த விளைவுகளை குறிக்கும்.
ஒருவரின் நல்வினை மற்றும் தீவினை பதிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது, இது அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கப்படும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம்மிடம் மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். சென்ற ஜென்ம தொடர்புகளை அறியுமிடம். கடந்த ஜென்மத்துடன் தொடர்பு பெற்ற மனிதர்களுடன் தீர்க்கப்பட வேண்டிய சம்பவங்கள் உள்ள மனிதர்களை இந்தப் பிறவியில் சந்திப்போம். அதாவது கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5-ம்மிடம் வேலை செய்ய வேண்டும்.
பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7-ம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2,5,7, 11-ம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூற முடியும். காதல் கிரகங்கள் 4-ம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
சந்திரனும் காதலும்
ஜோதிட சாஸ்திரத்தில் காதலுக்கு காரக கிரகம் புதனாக இருந்தாலும் மனதிற்கு காரக கிரகமான சந்திரனே ஒருவரின் காதலை நிர்ணயிக்கிறது. சந்திரன் பலம் வாய்ந்தவர்களுக்கு காதல் வராது. சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு மட்டுமே காதல் வரும். ஒருவரின் மனதில் நிறைவேறாத வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்பு கிடைக்கும்போது காதல் மலருகிறது. அந்த நட்பை அவர்கள் தமக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறார்கள். இந்த நட்பு இல்லை என்றால் தனக்கு வாழ்க்கை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் அவர்களால் தனது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்ள முடியும்.
சந்திரன் பலம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படும். தனது மன உணர்வுகளை புரிந்த ஒரு நட்பை சந்திக்கும்போது அவர்கள் மேல் காதல் வந்து விடுகிறது. நல்லது எது கெட்டது எது என்பதை பகுத்தாய்வும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மனதிற்கு தேவைப்படும் ஆறுதலை கூறும் நபர்கள் மட்டுமே உலகத்தில் உண்மையானவர்கள் மற்றவர்கள் தீயவர்கள் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அதுமட்டு மல்லாமல் சிரித்துப் பேசுபவர்கள் மட்டுமே நல்லவர்கள் கோபப்படுபவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாக இருக்கும்.
இந்த அமைப்பு உள்ளவர்கள் காதலில் தோல்வி அடைந்தால் மனநோயாளியாக மாறிவிடுகிறார்கள். சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு காதல் தோல்வியை எளிதில் தாங்க முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். காதல் கலப்பு திருமண கிரக அமைப்புகள் வெளிநாட்டவர். வெளி மாநிலத்தினர், வேற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளுதல் கலப்பு திருமணமாகும். திருமணம் தொடர்பான பாவகங்கள் 1,2,7, 8 ஆகியனவாகும். காதல் பற்றி கூறும் பாவம் 5. இதில் 1, 2,7-ம் பாவங்களுடன் 5-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். 9-ம் பாவகம் ஒருவரின் ஜாதி, மதம், குலம், கோத்திரம் ஆகியவற்றை கூறுமிடம். 1, 2, 5, 7-ம் பாவகத்துடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டால் காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.
மேலும் ஏழாமிடம் அல்லது ஏழாம் அதிபதிக்கு சுக்ரன், சனி அல்லது சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் ஜாதகர் கலப்பு திருமணம் செய்ததற்கான அமைப்பு உண்டாகும். 5, 7, 9-ம் அதிபதிகள் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். மேலும் ஒன்பதாம் அதிபதி அல்லது ஒன்பதில் நின்ற கிரகம் நீச்சம் பெற்று அத்துடன் 1, 2, 5, 7-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் தகுதி தரம் இல்லாத தனது குலத்தவரால் வெறுக்ககூடிய கலப்பு திருமணமாக அமைகிறது. 9-ம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் பெற்று 1,2,5, 7-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறும் அல்லது பெற்றோரே வேறு குலத்தில் வரன் பார்த்து திருமணம் நடத்துவார்கள்.
ஏழாம் இடத்துடன் தனித்து சனி ராகு கேதுக்கள் இருந்தாலும் காதல் கலப்பு திருமணம் நடைபெறலாம். ராகு, கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். களத்திர காரக கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய்க்கு ராகு கேது சம்பந்தம் இருப்பது வேற்று மதம், இனம் மொழி பேசுபவருடன் கலப்புத் திருமணத்தை ஏற்படுத்தும். ஏழாம் அதிபதியுடன் சனி, ராகு கேது சம்பந்தம் பெறுவதும் கலப்பு திருமணத்தை நடத்தும். 7-ம் இடத்தில் சனி, ராகு, கேது நட்சத்திரம் இருந்தாலும் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. 7, 8, 9-ம் பாவகம் அசுபத்தன்மையுடன் இணைந்து நடக்கும் காதல் கலப்புத் திருமணங்கள் தோல்வியை தழுவும். மேலே கூறிய இந்த பாகங்கள் தசா புத்தியுடன் சம்பந்தப்படும்போது வெளியூர் வெளிநாடு வெளி மாநிலம் செல்பவர்கள் காதல் கலப்பு திருமணம் செய்து அங்கேயே தங்கி விடுகிறார்கள்.
ஐந்தாம் அதிபதியும் லக்னமும் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை கூறுவது ஐந்தாம் இடமாகும். இந்த ஐந்தாம் இடத்தில் பூர்வ ஜென்ம புண்ணிய படி அனுபவிக்க வேண்டிய பல்வேறு நல்ல தீய விளைவுகள் இருக்கும். பல்வேறு வினைகளில் இந்த ஜென்மத்தில் ஜாதகர் எதை அனுபவிக்க போகிறார் என்பது லக்னத்தை லக்னாதிபதியை தொடர்பு கொள்ளும் கிரகத்தை வைத்து நாம் முடிவு செய்ய வேண்டும். லக்னம் லக்னாதிபதியுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சம்பவங்கள் இந்த வாழ்க்கையில் ஜாதகரின் விருப்பப்படி எளிதாக சுலபமாக நிறைவேறிவிடும். லக்னாதிபதியுடன் தொடர்பு பெறாத பாவகங்களின் கிரகங்களின் பலன்கள் ஜாதகர் போராடிய வெற்றி பெற வேண்டும்.
வெற்றி பெற்றாலும் அது நீடித்த காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கூற முடியாது. லக்னாதிபதிக்கு தொடர்பு பெற்று நடக்கக்கூடிய சம்பவங்கள் ஜாதகருக்கு எளிதில் வெற்றியையும் நிலைத்த தன்மையையும் கொடுக்கும். லக்னாதிபதி ஐந்தாம் அதிபதியின் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஜாதகரை தேடி காதல் வரும். பூர்வ ஜென்ம தொடர்பு உண்டு. கடந்த ஜென்மத்தில் அனுபவித்த அனைத்து நற்பலன்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். செல்வாக்கு புகழ் அந்தஸ்து கவுரவம் உண்டு. தற்பெருமை பேசுவார்கள். கடந்து வந்த ஜென்மத்தின் வாசனை அவர்கள் ஆழ் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
உள்ளுணர்வு நிரம்பியர்கள். தனது உள்ளுணர்வால் நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் முன்னரே அறியும் சக்தி படைத்தவர்கள். கடந்து வந்த ஜென்மத்தில் சந்தித்த நபர்களை பார்க்கும்போது அவர்கள் மேல் இவர்களுக்கு உள் உணர்வு மிகுதியால் காதல் வரும். தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல பிறரின் வாழ்க்கைக்கும் நடப்பதை நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து சொல்வார்கள். அதிர்ஷ்டம் இவர்களை தேடி வரும். இவர்கள் காதலில் கவுரவம் நிரம்பி இருக்கும். அதிகப்படியாக உறவுகளிலேயே திருமணம் நடக்கும். பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் வல்லவர்கள். தங்கள் குல கவுரவத்திற்கு ஒத்துவராத காதலில் ஈடுபடுவது இல்லை. குடும்ப சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்று குடும்பத்திற்குள்ளேயே திருமணம் நடத்துபவர்களுக்கும் லக்னாதிபதி 5-ம் அதிபதி சம்பந்தம் உண்டு. லக்னாதிபதி ஐந்தில் இருந்தால் ஜாதகர் காதலை தேடிச் செல்வார். ஐந்தாம் அதிபத்தில் லக்னத்தில் இருந்தால் காதல் ஜாதகரை தேடி வரும்.
காதல் வெற்றி தரும் கிரக சம்பந்தம்
ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால் வெற்றி, செல்வம் இரண்டிற்கும் இவர்களே அதிபதிகள். குறைந்தது 2 முறை காதல் வரும். நம்பிக்கையானவர்கள் மேல் மட்டுமே காதல் வரும். காதல் நினைவுகள் பல வருடங்களுக்கு ஆறாத வடுவாக மனதில் இருக்கும். காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஈருடலும் ஓர் உயிருமாக வாழ்வார்கள். வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் காதலர்களாகவே வாழ்வார்கள். தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வதில் ஆர்வம் அதிகம். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.
மனைவி வந்த பிறகு அதிர்ஷ்டம் கூடும். 5, 7ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. பால்ய வயது முதல் முதிய காலம் வரை நண்பர்களுக்குள் பரஸ்பர அன்பு நீடிக்கும். நல்ல வசதியான சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தம் கிடைக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும். சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும். நண்பர்கள், கூட்டாளிகள் குறுகிய காலத்தில் பயனற்று போவார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தியாக வெளித்தோற்றம் மட்டுமே இருக்கும். சம்பந்தம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பார்கள்.
காதல் திருமணம் நல்லதா?
காதல் திருமணங்களுக்கு ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே முக்கிய காரணமாகும். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையே காரணமாகும். சுக்கிரன். புதன், சனி, ராகு, கேது ஏழாம், ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை காதல் கலப்பு திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் வீட்டைவிட்டு வெளியேறி ரகசிய திருமணம் நடத்துகிறார்கள். பெரியோர்கள் சம்மதம் ஆசிர்வாதம் இன்றி செய்யப்படும் ரகசிய திருமணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை நிர்மூலப்படுத்துகிறது. ஒரு திருமணம் நிச்சயமாக பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் குலதெய்வத்தின் ஆசியுடனே நடக்க வேண்டும்.
செல்: 98652 20406






