என் மலர்
புதுச்சேரி
புதுவையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று 4801 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 1897 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. புதுவையில் 1395 பேரும்,, காரைக்காலில் 342 பேரும், ஏனாமில் 116 பேரும், மாகியில் 44 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 51 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 13 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 26 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 15 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் 174 பேர், வீட்டு தனிமையில் 15,522 பேர் என ஒட்டு மொத்தமாக 15,896 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22-ந் தேதி 1264 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 52 அயிரத்து 213 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 611 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே புதுவை தட்டாஞ்சாவடியை சேர்ந்த 55 வயது பெண், ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த 89 வயது முதியவர், வில்லியனூர் புதுநகரை சேர்ந்த 80 வயது முதியவர், வைத்திக்குப்பத்தை சேர்ந்த 65 வயது முதியவர், மோந்த்ரேஸ் வீதியை சேர்ந்த 90 வயது முதியவர் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1906 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கால் புதுவையில் சுற்றுலா தொழில்கள் முடக்கி போனதால்வருவாய் பாதிக்கப்பட்டது.-
புதுச்சேரி:
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
2-வது அலைக்கு பிறகு கொரோனா படிப்படியாக குறைந்து தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை அடைந்தது.
இதன்பின் மீண்டும் சுற்றுலா தொழில்கள் புத்துயிர் பெற்றது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதித்ததால் புதுவையில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
புத்தாண்டுக்கு பிறகு 3-வது அலை பாதிப்பு தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்
பாடுகள் விதித்துள்ளனர்.
புதுவையை பொறுத்தவரை வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிவர். அந்த நாட்களில் நகரின் பிரதான வீதிகளில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி, கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருப்பர். வார இறுதிநாட்களில் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும்.
நகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் குவிவர். இவர்கள் மூலம் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது, வீடுகளில் தங்க வைப்பது என பல்வேறு தொழில்கள் நடைபெறும்.
கடந்த 3 வாரமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துவிட்டது.
தமிழக பகுதிகளை தாண்டித்தான் புதுவைக்கு வரவேண்டும். அதோடு மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்ப முடியாது.
இதனால் நோணாங் குப்பம் படகு குழாம் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடியது. புதுவை நகர பகுதியில் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இல்லை.
மாநில எல்லைகளில் போலீசார் பேரிகார்டுகளை வைத்து
தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் புதுவையில் சுற்றுலாவை நம்பியுள்ள தொழில்கள் முடங்கிப்போயுள்ளது. வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம் அருகே சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேதனையில் முதியவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
முருங்கப்பாக்கம் மகா லட்சுமி நகர் வேல்ஸ் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்திரராஜூ (வயது76). ஏ.எப்.டி. மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தனது தம்பி செல்வம் என்பவரை பார்க்க வீராம்பட்டிணம் வந்தார்.
அப்போது தனது தம்பி செல்வம் கொரோனா தொற்றால் அவதி பட்டு வந்ததை கண்ட சந்திரராஜூ மன வேதனை அடைந்தார்.
இதனால் மனவேதனையில் சந்திர ராஜூ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீராம்பட்டிணம் கடலில் குதித்தார். அவரை ராட்சத அலை இழுத்து சென்றதால் கடலில் மூழ்கி இறந்து போனார்.
இது குறித்து அவரது சகோதரர் செல்வத்தின் மகன் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுவை எல்லையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
தமிழகப் பகுதியில் 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
புதுவை மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தவில்லை. இதனால் புதுவை மாநிலத்தை ஒட்டிய தமிழக பகுதியான கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதுவைக்கும், புதுவையைச் சேர்ந்தவர்கள் பிற மாவட்டத்திற்கும் செல்ல முடியாமல் தடுத்து வருகின்றனர்.
புதுவை எல்லைப்பகுதி யான முள்ளோடையில் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் கோரிமேடு, காலாப்பட்டு உள்ள புதுவை எல்லைப்பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கவில்லை.
தமிழக பகுதியில் ஊரடங்கால், புதுவை நகரத்திற்கு மற்றும் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் முழுமையாக இயக் கப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்து வராததால் கவலை அடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் தமிழக பகுதியும் உள்ளதால் புதுவையில் இருந்து கிராம பகுதிக்கு செல்லும்போது அங்கு தமிழக போலீசாரால் (ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம்) தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மேலும் ஊரடங்கை மீறுவதாக கூறி ரூ.500 அபராதம் விதிக்கின்றனர்.
முகூர்த்த தினம் என்பதால் பல இடங்களில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதற்கு உறவினர்கள், நண்பர்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
புதுவை அரசு வருங் காலங்களில் தமிழகப் பகுதியில் ஊரடங்கு இருந்தால் புதுவை மாநிலத்தில் இருக்கும் தமிழக மக்களை அனுமதிக்க அரசு அனுமதி பெற வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தேசிய அளவிலான குத்து சண்டை போட்டியில் புதுவை வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுச்சேரி:
தேசிய அளவிலான குத்து சண்டை (ஹப்கிடோ பாக்சிங்) சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
அகில இந்திய நடுவர் குழு சேர்மன் வளவன் தலைமை தாங்கினார். ஆசிய சங்க பொதுச்செயலாளர் ராஜ்ஹடேகர், இந்திய ஹப்கிடோ சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சந்தோஷ் வரவேற்றார்.
புதுவை சாய் மைய இயக்குனர் முத்து கேசவலு, மாநில விளையாட்டு கவுன்சில் நிர்வாக அதிகாரி சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, தெலுங்கானா, சட்டீஷ்கர், கோவா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 400&க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் தனிப்பட்ட முறையில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை புதுவை வீரரான கணேஷ் வென்றார். புள்ளிகள் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை முதல் இடத்தை மகாராஷ்டிராவும், 2-ம் இடத்தை கர்நாடகாவும், 3-ம் இடத்தை தமிழ்நாடும் பெற்றது.
இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.
புதுவை ரோடியர் மில் எந்திரங்கள் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரோடியர் மில்லை நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கவர்னர் கூறியதை கேட்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால் அந்த மில்லில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
புதுவையின் அடையாள மாக திகழ்வதுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அளித்த இந்த மில்லின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
கூட்டு சதியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விடக்கூடாது. எனவே இந்த கொள்ளையின் உண்மை நிலையை அறிந்து குற்றவாளிகளை தண்டிக்க அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கொள்ளையடித்த பொருட்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் இந்த மில்லோடு மீதி இருக்கும் 4 ஜவுளி ஆலைகளையும் ஒருங்கிணைத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் வகையில் மில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறி உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட் டுள்ளது.
தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் பலர் பரிசோதனை செய்வதில்லை. அப்படி பரிசோதனை செய்தால் தொற்று பாதிப்பு உயரும். புதுவை மாநிலத்தில் 75 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறி உள்ளது.
புதுவையில் உமிழ்நீர் பரிசோதனை குறைந்து வருகிறது. எனவே உமிழ்நீர் பரிசோதனையை அதிகரித்து தொற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. வழிகாட்டு நெறிமுறைகள் கட்டுப்பாடுகள் நடை முறையில் இல்லை. அனைத்து துறை அதிகாரி களும் அலட்சியமாக செயல் படுகிறார்கள்.
புதுவை கவர்னரும், முதல்-அமைச்சரும் தங்களின் கடமையை மறந்து மாநில மக்களை பகடை காயக்கிவிட்டனர்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 47 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். போர்கால அடிப்படையில் அரசு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஜிப்மருக்கு சிகிச்சை வரும் நோயாளிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய கடமை டாக்டர்களுக்கு உண்டு. மக்களுக்கு பேரிடர் காலத்தில் சேவை செய்வது தான் தரம் வாய்ந்த மருத்துவமனையின் வேலை. கொரோனாவை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகம் தனது கடமையில் இருந்து தவறக்கூடாது.
அனைத்து நோயாளி களுக்கும் ஜிப்மரில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதவும் உள்ளேன். எனவே ஜிப்மர் நிர்வாகம் தனது அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.
மாநில அரசின் அதிகாரத்தை படிப்படியாக பறித்து மத்திய அரசு சர்வாதிகார போக்கில் மாநிலங்களை டம்மியாக மாற்றி வருகிறது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது. இதனை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரில் கூட்ட நெரிசல் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கொரோனாவுக்கு ஆளாகாமல் இருக்க வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
கொரோனாவின் அதி தீவிர பரவல் காரணமாக ஜிப்மரின் முன்கள பணியாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் கூட வீட்டில் இருந்தபடி தொலைபேசி மூலம் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் நேரடியாக வெளிப்புற சிகிச்சை அளிக்க முடியாது. ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை சேவைகள் தொடர வேண்டும் என்று கவர்னர் மக்கள் நலன்கருதி வெளியிட்ட அறிவுறுத்தல்களை ஜிப்மர் அறிந்துள்ளது.
ஜிப்மரில் உள்ள அனைத்து வெளிப்புற சிகிச்சை சேவைகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. தொலைபேசி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் வெளிப்புற சிகிச்சை பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 4 ஆயிரம் நோயாளிகளுக்கு வெளிப்புற சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நடை முறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறுகிய கால நடவடிக்கைகளே என்பதை ஜிப்மர் நிர்வாகம் மீண்டும் வலியுறுத்துகிறது. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும். சிறிய அளவிலான மருத்துவ உபாதை களுக்கு ஜிப்மர் போன்ற கூட்ட நெரிசல் உள்ள பெரிய மருத்துவமனைக்கு வருவதைவிட தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள டாக்டர்களிடம் கலந்து ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீவிர மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சினை உடையவர்கள் மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அனைத்து விதமான அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்படைந்தவர்களுக்கான வைத்தியம் போன்ற அனைத்து முக்கிய பிரிவுகளிலும் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை பாதிக்கப்படாத வகையில் மருத்துவ சேவையை தொடர வேண்டும் என்றார். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக ஜிப்மர் நிர்வாகம் உறுதி அளித்தது.
வரதட்சணை கொடுமை செய்து வேறொரு திருமணம் செய்ததை போலீசில் புகார் செய்ததால் பெண்ணுக்கு கணவர்-மாமனார், மாமியார் கொலை மிரட்டல் விடுத்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் மகேஸ்வரி (38) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது செந்தில்குமாருக்கு 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக மகேஸ்வரி குடும்பத்தினர் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் செந்தில்குமாரின் குடும்பத்தினர் 50 பவுன் நகை,கார் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். இல்லையென்றால் செந்தில்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் 2018-ம் ஆண்டு மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பராமரிக்க செந்தில்குமார் தன்னிடம் படித்த முன்னாள் மாணவி ஓருவரை வேலைக்கு அமர்த்தினார். அந்த பெண்ணுடன் செந்தில்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த மகேஸ்வரி அந்த பெண்ணை வேலையை விட்டு நிறுத்தினார்.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற செந்தில்குமார் வீடு திரும்பவில்லை. அதேபோல் அந்த வேலைக்கார பெண்ணும் காணவில்லை.இதற்கிடையே செந்தில்குமாரும், அந்த பெண்ணும் ரகசிய திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையறிந்த மகேஸ்வரி செந்தில்குமாரின் பெற்றோரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை நாராயணன்,தாய் வத்திஸ்கா,அண்ணன் ஞானசுந்தரம் ஆகியோர் மீது புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசில் புகார் கொடுத்ததால் செந்தில்குமாரின் பெற்றோர்கள் மகேஸ்வரியை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி தனது குழந்தை மற்றும் உறவினருடன் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரில் தன்னை மிரட்டிய செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
கிருமாம்பாக்கத்தில் வீச்சரிவாள்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் சந்திப்பில் வாலிபர்கள் சிலர் வீச்சரிவாள்களை வைத்து கொண்டு, பொது மக்களை மிரட்டுவதாகவும், இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடுவதாகவும் கிருமாம்பாக்கம் போலீ சாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும், அந்த வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 6 வீச்சரிவாள் களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குருவிநத்தம் புதுநகரை சேர்ந்த நடராஜன் (வயது 26), பாகூர் பங்களா வீதி ராஜ்குமார் (20), குருவிநத்தம் பிடாரியம்மன் கோவில்வீதி பிரவின்குமார் (19) என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில், இவர்கள் புதுவையில் உள்ள முக்கிய ரவுடிகளுடன் தொடர்புடையர்கள் என்பதும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதும் தெரியவந்தது.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருவடிக்குப்பத்தில் கோஷ்டி மோதலில் வீடுகளை சூறையாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கருவடிகுப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா என்ற கேப் சூர்யா.
இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த எல்லாடை என்ற அருணுக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இருதரப்பை சேர்ந்த 2 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் வீடுகளை சூறையாடியதாக இரு தரப்பை சேர்ந்த சூர்யா, புஷ்பராஜ், பச்சைகிளி என்ற பிரதாப், பொரி மற்றும் எல்லடை அருண், பழனி ஆகிய 6 கைது செய்தனர். மற்ற 6 பேரை தேடி வருகிறார்கள்.
2 மாத சம்பளம் வழங்க கோரி பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை சாலை போக்கு வரத்துக்கழக அம்பேத்கர் ஊழியர்கள் சங்கத்தினர் 2 மாத சம்பளம், 2 ஆண்டு போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். போராட்டத்தை அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் மணீத் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ஐக்கிய பேரவை அமுதவன், மார்க்சிஸ்டு தமிழ்மாநில குழு பெருமாள், சிறை பாண்டியன், சேது செல்வம், குருநாதன், சக்திசிவம், நாகமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பக்கிரி சாமி, அமிர்தவேல், பூபாலன், கார்த்திமுனுசாமி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை அரசு ஊழியர் ஐக்கிய பேரவை முதன்மை செயலாளர் பாவாணன் முடித்து வைக்கிறார்.






