search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை
    X
    ஜிப்மர் மருத்துவமனை

    கொரோனா குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படும்- ஜிப்மர் நிர்வாகம் உறுதி

    கொரோனா குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் கூட்ட நெரிசல் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கொரோனாவுக்கு ஆளாகாமல் இருக்க வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    கொரோனாவின் அதி தீவிர பரவல் காரணமாக ஜிப்மரின் முன்கள பணியாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் கூட வீட்டில் இருந்தபடி தொலைபேசி மூலம் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் நேரடியாக வெளிப்புற சிகிச்சை அளிக்க முடியாது. ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை சேவைகள் தொடர வேண்டும் என்று கவர்னர் மக்கள் நலன்கருதி வெளியிட்ட அறிவுறுத்தல்களை ஜிப்மர் அறிந்துள்ளது.

    ஜிப்மரில் உள்ள அனைத்து வெளிப்புற சிகிச்சை சேவைகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. தொலைபேசி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் வெளிப்புற சிகிச்சை பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 4 ஆயிரம் நோயாளிகளுக்கு வெளிப்புற சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நடை முறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறுகிய கால நடவடிக்கைகளே என்பதை ஜிப்மர் நிர்வாகம் மீண்டும் வலியுறுத்துகிறது. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும். சிறிய அளவிலான மருத்துவ உபாதை களுக்கு ஜிப்மர் போன்ற கூட்ட நெரிசல் உள்ள பெரிய மருத்துவமனைக்கு வருவதைவிட தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள டாக்டர்களிடம் கலந்து ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தீவிர மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சினை உடையவர்கள் மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அனைத்து விதமான அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்படைந்தவர்களுக்கான வைத்தியம் போன்ற அனைத்து முக்கிய பிரிவுகளிலும் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை பாதிக்கப்படாத வகையில் மருத்துவ சேவையை தொடர வேண்டும் என்றார். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக ஜிப்மர் நிர்வாகம் உறுதி அளித்தது.
    Next Story
    ×