என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு கடந்த 26-ந் தேதி விண்ணப்பம் வழங்கப்பட்டது.
    • தரவரிசை பட்டியல் 12-ந் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    புதுச்சேரி:

    அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு கடந்த 26-ந் தேதி விண்ணப்பம் வழங்கப்பட்டது.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தரவரிசை பட்டியல் 12-ந் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்தபின் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சேர்க்கை நடக்கிறது. வரும் 19-ந் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவரும் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதர்தெரசா நர்சிங் கல்லூரி சுகாதார அறிவியல் நிறுவனத்தின் முதல்வர் மற்றும் பதிவாளர் டாக்டர் கோபால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது சுற்றுச்சூழலை பராமரிக்கும் முறைகளையும், அதனை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் பதிவாளர், டீன்கள், அனை த்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்டிடவியல் துறை தலைவர் சுந்தரராமன் நன்றி கூறினார்.

    • நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் லால்சலாம் படப்பிடிப்பு புதுவையில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.
    • இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார்.

    புதுச்சேரி:

    நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் லால்சலாம் படப்பிடிப்பு புதுவையில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.

    இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். புதுவையில் பிரசித்தி பெற்ற ரோடியர் மில்லில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சில நாட்கள் பங்கேற்று நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து புதுவையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    படப்பிடிப்புக்காக புதுவை எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள மதுக்கடை முனியாண்டி விலாசாக மாற்றப்பட்டுள்ளது.

    இது கடலூர் மஞ்சகுப்பத்தில் இயங்கும் கடை போல விளம்பரம் வைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் புதுவையில் படப்பிடிப்பு தொடரும் என படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் 2003-ல் திறக்கப்பட்டது.
    • 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு படகுகளை நிறுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் 2003-ல் திறக்கப்பட்டது. 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு படகுகளை நிறுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    2015 முதல் துறைமுகம் தூர்வாரப்படாததால் படகுகள் அடிக்கடி சேதமாகி வருகிறது. இதையடுத்து துறைமுகத்தில் படகுகள் கட்டும் இடத்தில் குவிந்துள்ள 35 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணலை ரூ.1.40 கோடியில் அகற்றி ஆழப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் அனிபால்கென்னடி, பாஸ்கர், மீனவ கிராம பஞ்சாயத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர். படகுகள் கட்டும் இடத்தில் தற்போதுள்ள 2 மீட்டர் 4 மீட்டராக ஆழப்படுத்தப்பட உள்ளது. இதனால் விசைப்படகுகள் தரை தட்டாமல் எளிதாக கடலுக்குள் சென்றுவர வாய்ப்பு ஏற்படும். வரும் 15-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் துறைமுகம் தூர்வாரப்படுவது மீனவர்க ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை வில்லியனூர் மெயின் ரோடு திருப்பதி பாலாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜாக்சன்.
    • பாத்திமா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து அண்ணன் இருதயராஜ் வீட்டில் வசித்து வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் மெயின் ரோடு திருப்பதி பாலாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜாக்சன் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த பாத்திமா என்பவருக்கும் நட்பு ரீதியான பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    பாத்திமா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து அண்ணன் இருதயராஜ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி இருதயராஜின் மனைவி வினிதாவிற்கும், பாத்திமாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    உடனே பாத்திமா ஜாக்சன் போன் செய்து தன்னை அழைத்து சென்று தனது தாய் வீட்டில் விடுமாறு கேட்டுள்ளார். உடனே ஜாக்சன் பாத்திமாவின் அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பாத்திமாவிடம் ஜாக்சன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருதயராஜ் நீ யார் என் தங்கையை அழைத்து செல்ல என கேட்டு தாக்க வந்துள்ளார். உடனே ஜாக்சன் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில்,  இருதயராஜ், ஜாக்சனுக்கு போன் செய்து காமராஜர் மணிமண்டபம் அருகே வருமாறு அழைத்துள்ளார். ஜாக்சனும் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இருதயராஜ் அவரது சித்தி மகன் அருள், மற்றும்

    நண்பர்கள் ஜாக்சனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. ஜாக்சனும் பதிலுக்கு தாக்கியதாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் உடனே இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். லாஸ்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களை சமா தான ப்படுத்தி போலீஸ் நிலையம் அழைத்து வந்து இருதரப்பி னர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பிறந்தநாள் விழா கொண்டாடினார்
    • அவருக்கு கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அவருக்கு கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா வாழ்த்து தெரிவித்தார்.

    விழாவில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம். எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், கட்சி நிர்வாகிகள் கோபால், கார்த்திகேயன், மணிமாறன், உப்பளம் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி தங்கவேலு, பொருளாளர் மணிமாறன், தி.மு.க. பிரமுகர்கள் நோயல், அஷ்ரப், ராஜி, விநாயகம், வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    முன்னதாக கென்னடி எம்.எல்.ஏ. நீடூழி வாழ வேண்டி அவரது ஆதரவா ளர்கள் நேத்தாஜி நகர் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், மிஷின்வீதி ஜென்மராகினி ஆலயம், திப்புராயப்பேட்டை லசார் கிருஸ்தவ ஆலயங்க ளில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதி தர்காவில் சிறப்பு தொழுகையும் நடத்தினர்.

    மேலும் கென்னடி எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முல்லா வீதியில் ஏழைகள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திப்புராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள தொழு நோயாளிகளுக்கும், நேதாஜி நகர்-2 ரெயின்போ பவுண்டேசன் நிறுவனத்தில் உள்ள வர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுவை வேளாண்துறை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு நிதி உதவியின் மூலம் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    படுகை அணை கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நிலத்தடி நீர் அதிகார அமைப்பு உறுப்பினர் செயலர் மனோகர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல உறுவையாறு அன்பு நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இங்கு 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி யுடன் கூடிய குடிநீர் திட்டம் ரூ. 1 கோடியே 51 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்கான அடிக்கல்லை முதல்- அமைச்சர் ரங்கசாமி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் பெரும்பாலான பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை.
    • பொதுமக்கள் வெயில், மழையில் காத்திருந்து பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பெரும்பாலான பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. பொதுமக்கள் வெயில், மழையில் காத்திருந்து பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை போக்குவரத்து துறை ரூ.3 கோடியே 25 லட்சத்தில் நவீன வசதிகளுடன் 20 இடங்களில் ஸ்மார்ட் பயணிகள் நிழற்குடை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், ரெயில்நிலையம், பஸ் நிலையம், காமராஜர் சிலை சதுக்கம், வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம், எஸ்.வி. படேல் சாலை, செஞ்சி சாலை உள்ளிட்ட இடங்கள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த பயணிகள் நிழற்குடையில் கண்காணிப்பு கேமராக்கள், நவீன இருக்கை, எல்.இ.டி. விளக்குகள், எப்.எம். ரேடியோ, செல்போன் சார்ஜிங் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வுதளம் உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட உள்ளது.

    மேலும் நவீன தகவல் பலகையில் வழித்தட எண், பஸ்கள் வந்து சேரும் தகவல், வருகை நேரம் குறிப்பிடப்படும்.

    இதற்காக 2 எல்.இ.டி. பேனல்கள் வைக்கப்பட உள்ளது. ஒன்றில் பொதுமக்கள் பயன்படும் தகவல்களும், மற்றொன்றில் விளம்பரங்களும் ஒளிபரப்பாகும். இதன்மூலம் உள்ளாட்சி, நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட உள்ளார்.

    • புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.
    • மது பாட்டில்களை விட குறைந்த விலையில் அதிக போதை தரும் கஞ்சா விற்கப்படுவதால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள்வரை கஞ்சா பழகத்துக்கு ஆளாகிவுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மது பாட்டில்களை விட குறைந்த விலையில் அதிக போதை தரும் கஞ்சா விற்கப்படுவதால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள்வரை கஞ்சா பழகத்துக்கு ஆளாகிவுள்ளனர்.

    சமூக விரோதிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா வை கடத்தி வந்து புதுவையில் விற்பனை செய்கிறார்கள்.

    இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.

    இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு அவ்வப்போது கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள் ஆனாலும் புற்றீசல் போல கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரியாங்குப்பம்-தவளகுப்பம் மற்றும் கிராம பகுதிகளில் பள்ளி - கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்று முன் தினம் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதுபோல் காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தவளகுப்பம் முத்து முதலியார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தவளகுப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று கண்காணித்தனர்.

    இந்த நிலையில் சந்தேகப்படும் படியாக இருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அங்கு 2 பேர் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் மாவட்டம் எஸ்.எம். சாவடியை சேர்ந்த சந்தோஷ்  மற்றும் 17 வயது சிறுவர் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 38 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன் ஒரு பைக் பறிமுதல் செய்தனர்.

    • புதுவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை சென்டாக் அமைப்பு நடத்தி வருகிறது.
    • சென்டாக் ஒருங்கிணைப்பாளராக தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை சென்டாக் அமைப்பு நடத்தி வருகிறது.

    இந்த அமைப்புக்கு கல்வித்துறை செயலர் சேர்மனாகவும், சுகாதாரத்துறை செயலர் துணை சேர்மனாகவும் உள்ளனர். உயர்கல்வித் துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் உட்பட 11 உறுப்பினர்கள் நிர்வகிக்கின்றனர். இதில் சென்டாக் ஒருங்கிணைப்பாளராக தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கூடுதல் ஒருங்கிணைப்பாளராக உயர்கல்வித்துறை இயக்குனர் அமன்சர்மா, கன்வீனராக தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ், இணை கன்வீனராக கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி முதல்வர் சிரில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை உயர்கல்வித்துறை சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்.

    • நீதிமன்றங்களில் வழக்குகளின்போது சம்மன் மற்றும் வாரண்டு பிறப்பிக்கப்படும்.
    • இந்த சம்மனில் எந்த வழக்கு, எந்த கோர்ட்டில், எந்த தேதியில் விசாரணை நடத்தப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கும்.

    புதுச்சேரி:

    நீதிமன்றங்களில் வழக்குகளின்போது சம்மன் மற்றும் வாரண்டு பிறப்பிக்கப்படும்.

    இந்த சம்மனில் எந்த வழக்கு, எந்த கோர்ட்டில், எந்த தேதியில் விசாரணை நடத்தப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் பலர் குறித்த தேதியில் ஆஜராவதில்லை. இதனால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கும். இதனால் வழக்கு விசாரணை தள்ளிப்போகும். நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவாக முடிக்க உதவும் வகையில் புதுவை போலீஸ்துறையில் மாவட்ட சட்டம் மற்றும் நிர்வாக பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் செயல்பட உள்ள இந்த பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர், சட்ட புலமை பெற்ற 2 ஆயுதப்படை போலீசார் இடம்பெறுவர்.

    மாநிலம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நீண்டநாட்களாக கிடப்பில் உள்ள சம்மன், வாரண்டு வழக்குகளை இந்த குழு கவனிக்கும்.

    சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளையும் கண்காணித்து அறிவுறுத்தும்.

    அரசு வக்கீல்களுடன் இணைந்து முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் ஜாமீனில் செல்வதை எதிர்த்து ஆட்சேபனை செய்தல், கமிஷன்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, பொதுமக்கள் புகார்களை கண்காணிப்பது, மாநில குற்ற தரவுகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடும்.

    இந்த புதிய பிரிவு அலுவலகம் உருளைன்பேட்டை ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமைய உள்ளது.

    • ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து கேட்ட ஆளும் அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்.எல்.ஏ. மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • எதிர்கட்சியாக இருந்தாலும் அவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என காங்கிரஸ் அரசு நினைத்தது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து கேட்ட ஆளும் அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்.எல்.ஏ. மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது மிக கொடுமையான செயல். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆட்சியின்போது கவர்னராக இருந்த கிரண்பேடியை எதிர்த்து பேசிய அன்பழகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அவரின் குரல் ஒலிக்க வேண்டும். எதிர்கட்சியாக இருந்தாலும் அவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என காங்கிரஸ் அரசு நினைத்தது.

    மோடியை எதிர்த்து பேசினால் எப்படி வழக்கு தொடர்வாரோ? அதே போல புதுவை ஆட்சியா ளர்கள் நடந்து கொள்கின்ற னர். இது மக்கள் குரலை நசுக்கும் செயல். புதுவையில் மின்தடை யால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் காற்று அடித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படு கிறது. இவற்றை கவனிக்க அரசு தவறுகிறது. தவறை சுட்டிக்காட்டும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    புதுவையில் ரங்கசாமி, நமச்சிவாயம் ஆகியோர் 2 மோடிகளாக செயல்படு கின்றனர். புதுவை மக்களின் குரலை ஒடுக்குகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு ஊழல், முறைகேடு கள் உள்ளது. பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கடிதம் எழுத உள்ளேன். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்யும் தவறுகளுக்கு கவர்னர் உறுதுணையாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×