என் மலர்
இந்தியா

ஆதீனா மசூதிக்கு சென்ற யூசுப் பதான் - ஆதிநாத் கோவில் எனக்கூறி சர்ச்சையை கிளப்பிய பாஜக
- யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.
- கி.பி 1373-1375 காலகட்டத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அந்த பதிவில், "மேற்கு வங்காளத்தின் மால்டாவில் உள்ள ஆதீனா மசூதி, 14 ஆம் நூற்றாண்டில் இலியாஸ் ஷாஹி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரான சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசூதியாகும். கி.பி 1373-1375 இல் கட்டப்பட்ட இந்த மசூதி அந்த காலத்தில் இந்திய துணைக் கண்டத்தின் மிகப்பெரிய மசூதியாக இருந்தது. இது இப்பகுதியின் கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
யூசுப் பதானின் இந்த பதிவை பகிர்ந்த மேற்குவங்க பாஜக, "இது ஆதீனா மசூதி அல்ல ஆதிநாத் கோவில்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஆதீனா மசூதிக்குள் நுழைந்த பூசாரிகள் இந்து சடங்குகளை நடத்தினர். பிருந்தாவனத்தில் உள்ள விஸ்வவித்யா அறக்கட்டளையின் தலைவரான ஹிரன்மோய் கோஸ்வாமி, இந்து கோவிலின் மீது மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து கோஸ்வாமி மீது இந்திய தொல்லியல் துறை வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.






