என் மலர்
இந்தியா

வக்பு மசோதாவை ஏற்காதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் - பீகார் துணை முதல்வர் மிரட்டல்
- வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன.
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.
இந்நிலையில், மூத்த பாஜக தலைவரும் பீகார் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, வக்பு மசோதாவுக்கு எதிராக பேசுபவர்களை தேச துரோகிகள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அவர், "வக்பு மசோதாவை ஏற்கமாட்டோம் என்று பேசுபவர்கள் சிறைக்கு செல்வார்கள். இது பாகிஸ்தான் கிடையாது. இந்துஸ்தான். இது நரேந்திர மோடியின் அரசு. வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள், அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.






