என் மலர்
இந்தியா

கரூர் சம்பவத்தில் விஜய் தப்பி ஓடவில்லை: த.வெ.க. பரபரப்பு வாதம் - SIT விசாரணைக்கு எதிர்ப்பு
- கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.
புதுடெல்லி:
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மூத்த வக்கீல்கள் கோபால் சுப்பிரமணியம், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
கரூரில் போலீசார் அறிவுறுத்தலின்படியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேறினார். விஜய் அங்கு இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கல் ஆகி விடும் என்று போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது.
கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை. ஆனால் கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் தப்பி ஓடி விட்டதாக ஐகோர்ட்டு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க த.வெ.க. நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை.
இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழகமோ, விஜய்யோ எதிர்மனுதாரராக இல்லாதபோது எதற்காக எங்களை பற்றி ஐகோர்ட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்? வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜயின் தலைமை பண்பு குறித்து எல்லாம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
எதிர்மனுதாரராக சேர்க்காமல், விளக்கம் கேட்காமல் விஜய் குறித்து ஐகோர்ட்டு அவதூறு கருத்துக்களை கூறியுள்ளது.
மாநில அதிகாரிகளை மட்டுமே கொண்டு சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நாங்கள் எதிர்க்கவில்லை. காவல் துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததை எதிர்க்கிறோம்.
எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், "சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் அஸ்ராகார்க் சிறந்த அதிகாரி. அவர் சி.பி.ஐ.யில் பணியாற்றி உள்ளார். அவரை பரிந்துரைத்தது ஐகோர்ட்டுதான்.
விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம். 12 மணிக்கு வருவதாக அறிவித்து விட்டு இரவு 7 மணிக்கு விஜய் வந்தார். 41 பேர் உயிரிழந்ததால்தான் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டு உள்ளது" என்றனர்.
அவர்களிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு:-
ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு வரம்புக்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு எப்படி விசாரிக்கலாம். பிரசாரம் தொடர்பான நெறிமுறைகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது.
தேர்தல் பிரசாரம், ரோடு ஷோ, வழிகாட்டுதல்களுக்கான சென்னை ஐகோர்ட்டில் கிரிமினல் வழக்கு ஆனது எப்படி? ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன? கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன்?
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்தது ஏன்? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து இந்த வழக்கில் விவாதம் நடைபெற்றது.






