என் மலர்
இந்தியா

VIDEO: விபத்து சோகத்துக்கு மத்தியில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஊழியர்கள் - டிஸ்மிஸ் செய்த ஏர் இந்தியா
- லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
- எங்கள் ஊழியர்களின் நடத்தையில் காட்டப்பட்ட கவனக்குறைவுக்கு நாங்கள் வருந்துகிறோம்.
ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விமான நிலையத்திற்கு அருகில் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் விமானம் மற்றும் விடுதியில் இருந்தவர்கள் என 275 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த சோகம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அரியானாவின் குருகிராமில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய சேவைகள் (AISATS) அலுவலகத்தில் சில ஊழியர்கள் பார்ட்டி மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு AISATS நிர்வாக செய்தி தொடர்பாளர் கொடுத்த விளக்கத்தில். "ஏர் இந்தியா நிறுவனம் AI 171 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.
எங்கள் ஊழியர்களின் நடத்தையில் காட்டப்பட்ட கவனக்குறைவுக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த நடத்தை எங்கள் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில், நான்கு மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
AISATS நிறுவனம் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா லிமிடெட் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சாட்ஸ் லிமிடெட் இடையேயான 50-50 கூட்டு முயற்சியில் இயங்கி வரும் கிளை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.






