என் மலர்
இந்தியா

திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழ்நாடு அரசின் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம் கோர்ட்
- மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
- கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பேரில் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்றும் கடந்த 3-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர். பின்னர் நேற்று மாலையில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மீண்டும் நேற்று மாலை 7 மணிக்குள் ராம ரவிக்குமார் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும் என்றும் அது தொடர்பான நடவடிக்கையை இன்று காலை 10:30 மணி அளவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை.
பின்னர் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று தீபம் ஏற்ற வலியுறுத்திய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்கள்.
பின்னர் அரசு தரப்பு வக்கீல்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் உள்ளிட்டோர் ஆஜராகி, பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது அதே இடத்தில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற கோருவது ஏற்புடையதல்ல.
இது தொடர்பான வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி முன்பு வாதாடினார்கள்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த காரணத்தால் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கிறேன். இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய படை கமாண்டர் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
திருப்பரங்குன்றம் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஆவணம் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.






