search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் இன்றுடன் முடிவடையும் தேர்தல் பிரசாரம்: தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை
    X

    தெலுங்கானாவில் இன்றுடன் முடிவடையும் தேர்தல் பிரசாரம்: தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை

    • ராகுல் காந்தி துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் உரையாடி ஓட்டு வேட்டை.
    • பா.ஜனதா தலைவர்கள், சந்திரசேகர ராவ் கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில தேர்தல் முடிவடைந்ததால் உள்ளூர் தலைவர்கள், தேசிய தலைவர்கள் தெலுங்கானா பக்கம் திரும்பினர்.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை தெலுங்கானாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பல்வேறு இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மாநில தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கடைசி நாளான இன்றும் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, இன்றைய பிரசாரத்தின்போது கேசிஆர் மக்களை சந்திக்காமல் பண்ணை வீட்டில் வசிக்கிறார் என விமர்சித்தார்.

    நேற்று பா.ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு வேட்டை நடத்தினர். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ் கட்சிக்கு சென்றடையும். இதனால் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். இன்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் சந்திரசேகர ராவ் கட்சியின் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் தலைவர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    நாளை வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, வாக்கு இயந்திரங்கள் வாக்குமையத்திற்கு கொண்டு செல்லப்படும். நாளைமறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.

    Next Story
    ×