search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொகுதி பங்கீடு விவாதம் தவிர்ப்பு- இந்தியா கூட்டணி இன்று மும்பையில் கூடுகிறது
    X

    தொகுதி பங்கீடு விவாதம் தவிர்ப்பு- இந்தியா கூட்டணி இன்று மும்பையில் கூடுகிறது

    • 28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை.
    • கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து "இந்தியா" (இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி) என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    இந்த புதிய கூட்டணியை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களாக கடுமையாக பாடுபட்டு உருவாக்கி உள்ளார். இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

    2-வது ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து 3-வது ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.

    கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தியா கூட்டணியின் இன்றைய 3-வது கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 பேர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் டி.ஆர்.பாலுவும் சென்றிருக்கிறார்.

    இதுபோல மற்ற கட்சி தலைவர்களும் இன்று காலை மும்பை சென்று சேர்ந்தனர். அவர்களுக்கு ஓட்டலில் மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

    இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் முந்தைய 2 கூட்டங்களை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றும், நாளையும் 2 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

    அதன் அடிப்படையில் அடுத்தடுத்து கொள்கை அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டு போராட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதுபற்றி 28 கட்சி தலைவர்களும் இன்று விவாதிக்க உள்ளனர்.

    28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை. டெல்லியில் அதற்கான அலுவலகத்தை திறப்பதற்கு இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அது போல இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், தலைவர் மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் வேட்பாளர் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டுமானால் பெரும்பாலான தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் 22 கோடி வாக்குகள் கிடைத்திருந்தன. அதே சமயத்தில் தற்போதைய இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு 23 கோடி வாக்குகள் கிடைத்து இருந்தன.

    எனவே பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் பா.ஜனதா வேட்பாளரை எளிதில் வீழ்த்த முடியும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் கருதுகிறார்கள். இதற்காக தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று சில கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பாக இன்றும், நாளையும் இந்தியா கூட்டணி தலைவர்கள் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்தநிலையில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே திடீர் சிக்கல் எழுந்துள்ளது. மும்பை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பட்டியலில் தொகுதி பங்கீடு பிரதானமாக இடம் பெற்று இருந்தது. திடீரென அதை விவாதிக்க வேண்டிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர்.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் இப்போதே தொகுதி பங்கீடு பற்றி பேசினால் அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அதனால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தேர்தல் தேதி அறிவித்த பிறகு கடைசி நாட்களில் தொகுதி பங்கீடை தீர்மானிக்கலாம் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தினார். அதனால் தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை" என்று கூறினார்.

    நிதிஷ்குமாரின் கோரிக்கையை சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தொகுதி பங்கீடு இந்தியா கூட்டணியில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தெரிவிக்கிறார்கள்.

    பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் இன்னமும் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மாநிலங்களில் காங்கிரசுக்கும், மாநில கட்சிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.

    டெல்லியிலும், பஞ்சாபிலும் கூட்டணிக்கு தலைமை ஏற்க ஆம் ஆத்மி தீவிரமாக உள்ளது. அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுபோல மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்க விரும்பவில்லை.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் காங்கிரசை களம் இறக்க மாநில கட்சிகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் தொகுதி பங்கீட்டை ஒத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

    தொகுதி பங்கீடு செய்ய இயலாவிட்டாலும் குழுக்கள் அமைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்கி விட முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சி தலைமை புதிய கூட்டணி உருவான போது நாடு முழுவதும் மக்கள் எப்படி ஆதரவு தெரிவித்தார்களோ அதே போன்று இந்தியா கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று இந்த கூட்டணியின் முக்கிய தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    என்றாலும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது பற்றி மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. எனவே மும்பை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை பா.ஜனதா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    Next Story
    ×