search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுக்கு இழுக்க மறைமுக பேச்சுவார்த்தை
    X

    கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுக்கு இழுக்க மறைமுக பேச்சுவார்த்தை

    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது.
    • குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    இதுதவிர 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில் காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி பெற கடுமையாக போராடினர். பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அதில் மந்திரிகளை சந்திக்க முடியவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து பேச முடியவில்லை என்றும் பரபரப்பான குற்றச் சாட்டுகளை தெரிவித்து இருந்தனர். அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த சில எம்.எல்.ஏ.க்கள் அது பா.ஜ.க.வின் சதிவேலை என்று தெரிவித்தனர். சில எம்.எல்.ஏ.க்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது கருத்து வேறுபாடுகளை களைந்து பணியாற்றுமாறும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் சிலரை மீண்டும் காங்கிரசில் இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து சிலர் வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களில் காங்கிரசை சேர்ந்த பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), எஸ்.டி.சோமசேகர் (யஸ்வந்த்பூர்) மற்றும் சிவராம் ஹெப்பர் (எல்லாபூர்) ஆகியோர் அடங்குவர்.

    இதேபோல் ஜனதாதளத்தை சேர்ந்த கே.கோபாலையா (மகாலட்சுமி லேஅவுட்), தொட்ட நாகவுட் பாட்டீல் (குஷ்டகி) ஆகிய 6 பேர் ஆபரேசன் தாமரை மூலம் பா.ஜனதாவில் இணைந்தனர். இதில் சிலர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த நிலையில் அடுத்து ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அவர்கள் மீண்டும் காங்கிரசில் இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள நிலையில் பா.ஜனதாவிலிருந்து வந்தால் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைப்பது மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் பா.ஜனதாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் காங்கிரசில் இணைந்தால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசில் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். இதேபோல் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரியன் கார்கே கூறும்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் சேர விரும்பினால் நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்களின் சேவைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

    2019-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்திலிருந்து விலகி சென்றவர்களை அதேபாணியில் காங்கிரஸ் மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணையலாமா, வேண்டாமா என்ற இரட்டை நிலைப்பாட்டில இருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×