என் மலர்
இந்தியா

முதல் நாள் ஆய்வின் போது நூதன தண்டனை வழங்கிய சப்-கலெக்டரை தோப்புக்கரணம் போட வைத்த வக்கீல்கள்
- வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பணியின் முதல் நாளிலேயே அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை கண்ட சப்-கலெக்டர் கோபம் அடைந்தார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த ரிங்கு சிங் அந்த நபரை தோப்புக்கரணம் போட வைத்தார்.
இந்த நடவடிக்கையை கண்ட அப்பகுதி வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சப்-கலெக்டருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரிங்கு சிங் ராஹி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. நிலைமை விபரீதமாவதை கண்ட சப்-கலெக்டர் வக்கீல்கள் முன்னிலையில் தனது காதுகளை பிடித்து உட்கார்ந்து அமர்ந்து தோப்புக்கரணம் போட்டார்.
மேலும் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து ரிங்கு சிங் ராஹி கூறுகையில், வக்கீல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நல்ல உறவு பாதிக்கப்படும் என்பதால் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்டேன் என்றார்.






