என் மலர்
இந்தியா

வாழவே முடியாத நகரம்.. டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா? - சசி தரூர் கேள்வி
- இன்றைய தினம் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது.
- இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது.
டெல்லி இன்னும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பு இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புக்கு மாறி வருகின்றன.
டெல்லி காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 40 சிகெரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் தீங்குகளுக்கு ஈடாகும் என்று கூறப்படுகிறது. இன்றைய தினம் [செவ்வாய்கிழமை] டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது.
டெல்லியின் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளோடு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் காற்று மாசு பிரச்சனை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர பாராளுமன்ற எம்.பி.யுமான சசி தரூர் தனது சமூக வலைதள பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
அவரது பதவில், 'உலகின் அதிக மாசுபட்ட நகரமாக டெல்லி அதிகாரப்பூர்வமாகவே மாறியுள்ளது. உலகின் இரண்டாவது அதிக மாசுபட்ட நகரமான டாக்கா [வங்க தேசம் தலைநகர்] நகரை விட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கொடுங்கனவை நாம் எதிர்கொண்டு வந்தாலும் நமது அரசு அது பற்றி ஏன் எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
கடந்த நானும் 2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்கான காற்றின் தர வட்ட மேஜை கூட்டங்களை நடத்திவந்தேன், ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை, எனவே கடந்த வருடம் அதைக் கைவிட்டுவிட்டேன்.
இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ வாழலாம் என்றுதான் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






