search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமைச்சரான முன்னாள் நக்சலைட்.. வெற்றி சகாப்தமான சீதக்கா..
    X

    அமைச்சரான முன்னாள் நக்சலைட்.. வெற்றி சகாப்தமான சீதக்கா..

    • காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்துள்ளார்.
    • சீதக்கா 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று (டிசம்பர் 07) பதவியேற்றுக் கொண்ட நிலையில், இவருடன் 11 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    காங்கிரஸ் தலைமையிலான 11 பேர் அடங்கிய அமைச்சரவையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் சீதக்கா. நக்சலைட் அமைப்பில் இருந்து, அரசியலில் எண்ட்ரி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்று இருக்கும் சீதக்கா அம்மாநில அரசியல் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்து வருகிறார்.


    ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முலுகு மாவட்டத்தை அடுத்த ஜகன்னபேட்டாவில் ஆதிவாசி குட்டி கோயா குடும்பத்தில் சாரையா மற்றும் சாரக்கா தம்பதிக்கு பிறந்தவர் தான் சீதக்கா. தனது குடும்பத்தில் இளம் குழந்தையாக பிறந்த தன்சாரி அனுசுயா என்கிற சீதக்கா தனது 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    1980-களில் மாவோயிஸ்ட் அண்ணன்களின் கருத்தியலை விரும்பிய சீதக்கா அவர்கள் நில உரிமையாளர்களை எதிர்கொண்டு சண்டையிட்ட விதத்தால் அமைப்பில் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பத்தாரை போன்றே சீதக்காவும் தனது வாழ்க்கையை சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தியாகம் செய்ய முன்வந்தார்.


    பெற்றோரால் அனுசுயா என்று பெயர்சூட்டப்பட்ட இவருக்கு நக்சல் படையை சேர்ந்த தலைவர்களே சீதா என்ற புதிய பெயர் சூட்டினர். இந்த பெயர் தான் காலப்போக்கில் சீதக்கா என்று மாறியது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து பயணித்த சீதக்கா கமாண்டோவாக பணியாற்றி வந்தார். ஒருகட்டத்தில் மாவோயிஸ்டுகளின் அரசியல் கருத்துக்களில் முரண்பாடு ஏற்பட, அந்த அமைப்பில் இருந்து வெளியேறி 1997-ம் ஆண்டு சரண் அடைந்தார்.

    பிறகு, அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியின் போது பொது வாழ்க்கையை தொடங்கிய சீதக்கா, வழக்கறிஞர் அவதாரம் எடுத்து பழங்குடியிர் மற்றும் முலுகு பகுதியின் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடினார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் முலுகு தொகுதியில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்ட சீதக்கா, சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.



    பிறகு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய சீதக்கா தனது சமுதாயம் பற்றிய ஆய்வு செய்து பட்டம் பெற்றார். அந்த வகையில் முலுகு தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினரான சீதக்கா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஆர்.எஸ். கட்சியின் பேட் நாகஜோதியை 33 ஆயிரத்து 700 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

    தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட அதிக வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற சீதக்கா, தெலுங்கானா மாநிலத்தின் பழங்குடியின நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பின் போது இவரது பெயர் அழைக்கப்பட்டதும், அங்கிருந்த கட்சி தொண்டர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் ஆரவாரம் சில நொடிகள் வரை நீடித்தது. இதன் காரணமாக உறுதிமொழி ஏற்க சீதக்கா சில நொடிகள் மேடையிலே காத்திருந்தார்.

    Next Story
    ×