search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் யாத்திரைக்கு 7 நாட்கள் ஓய்வு: டெல்லியில் 2-ம் தேதி மீண்டும் புறப்படுகிறது
    X

    ராகுல் யாத்திரைக்கு 7 நாட்கள் ஓய்வு: டெல்லியில் 2-ம் தேதி மீண்டும் புறப்படுகிறது

    • யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
    • மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த யாத்திரை 9 மாநிலங்களை கடந்து 108-வது நாளான நேற்று காலையில் டெல்லியை சென்றது. டெல்லி மாநில எல்லையான பதர்பூர் சென்றதும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி ராகுல் நடைபயணம் சென்றார். இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழிநெடுக ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றார்கள்.

    சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்பட ராகுல் குடும்பத்தினரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பேரணியில் பங்கேற்றார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது கட்சியினர் 250 பேருடன் பேரணியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல், கார்கே, கமல் உள்ளிட்டோர் பேசினார்கள்.

    மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பேரணியில் பங்கேற்றவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை.

    சோனியா முகக்கவசம் அணிந்து இருந்தார். பிரமாண்ட கூட்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்து வந்தனர்.

    நேற்றைய நடைபயண நிறைவில் ராகுல் பேசும்போது, `2,800 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கேயும் நான் வன்முறையை பார்க்கவில்லை.

    இந்த பாதயாத்திரை இந்தியாவை இணைப்பதை தான் நோக்கமாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக வெறுப்பு, வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை தான் பரப்பும்' என்றார்.

    நடைபயணத்துக்கு 7 நாட்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மீண்டும் 1-ந்தேதி அவரவர் கண்டெய்னர்களில் வந்து ஆஜர் ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது டெல்லியில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. கண்டெய்னர்களில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் குளிர் சாதன வசதிகளை அகற்றி விட்டு ஹீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் அடுத்த சில நாட்களில் நிறைவடையும். அதன்பிறகு மீண்டும் பாதயாத்திரையை ராகுல் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×