search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானது: அசோக் கெலாட்
    X

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானது: அசோக் கெலாட்

    • பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதி காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
    • உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற வளாகம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அத்துடன், பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதியும் காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது. அந்த தினம் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த நாளை தேர்வு செய்தது தேசத்தை கட்டமைத்த தலைவர்களுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.

    "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இதே கருத்தை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டை பகிர்ந்துள்ள அவர், 'ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, அரசியலமைப்புச் சட்டம், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற அவைகளின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என கூறியுள்ளார்.

    மேலும், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    Next Story
    ×